IRCTC Complaint : நீங்க செஞ்ச உணவை எப்போவாச்சு சாப்பிட்டு இருக்கீங்களா...ரயிலில் அளித்த உணவு குறித்து பயணி அளித்த புகார்..!
பெண் பயணி ஒருவர் ரயிலில் அளிக்கப்பட்ட உணவு குறித்து புகார் தெரிவித்தார்.
பெரும்பாலான நபர்களுக்கு பயணம் செய்வது என்றால் அலாதி பிரியம். அதுவும், ரயிலில் பயணம் செய்வது என்றால் மகிழ்ச்சியின் உச்சக்கட்டத்திற்கே சென்றுவிடுவார்கள். ஆனால், ரயிலில் அளிக்கப்படும் உணவு பெரும்பாலான சமயங்களில் சிறப்பாக இருப்பதில்லை.
தொடர் புகார்கள்:
சில சமயங்களில் மோசமாக கூட இருக்கிறது. இதுபோன்ற புகார்களை பயணிகள் முன்வைத்த வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக, வீட்டில் சமைத்த உணவை மக்கள் எடுத்து வரும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். மோசமான சுவை மற்றும் குறைந்த தரம் ஆகிய காரணங்களால் ரயிலில் தரப்படும் உணவை மக்கள் விரும்புவதில்லை.
இந்நிலையில், அதன் தொடர்ச்சியாக, பெண் பயணி ஒருவர் ரயிலில் அளிக்கப்பட்ட உணவு குறித்து புகார் தெரிவித்தார். ட்விட்டரில் பூமிகா என்ற பயணி வெளியிட்ட பதிவில், பாதி சாப்பிட்டு வைத்த உணவின் புகைப்படத்தை இணைத்துள்ளார். அந்த புகைப்படத்தில், தால், சப்ஜி, ரொட்டி, சாப்பாடு ஆகியவை பாதி சாப்பிட்டு விட்ட மிச்சமே உள்ளது.
உங்கள் உணவை நீங்கள் எப்போதாவது சுவைத்திருக்கிறீர்களா?
"IRCTC, உங்கள் உணவை நீங்கள் எப்போதாவது சுவைத்திருக்கிறீர்களா? இதுபோன்ற மோசமான தரத்தையும் சுவையையும் உங்கள் சொந்த குடும்பத்திற்கும் குழந்தைகளுக்கும் நீங்கள் எப்போதாவது கொடுப்பீர்களா? கைதிகளுக்கு அளிக்கப்படும் உணவு போல உள்ளது. டிக்கெட் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஆனால், அதே மோசமான தரமான உணவை உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறீர்கள்.
இந்த பதிவு எந்த IRCTC ரயில் ஊழியர்களையும் குறை கூற எழுதவில்லை. இது உணவு அளிக்கும் ஊழியர்களின் தவறு அல்ல. ஐஆர்சிடிசி உணவை எங்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்கள் தங்கள் வேலையைச் செய்கிறார்கள். உணவுப் பணியாளர்கள் எங்கள் பணத்தைத் திருப்பித் தர வந்தனர். ஆனால், அது அவர்களின் தவறல்ல" என பூமிகா பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு வெளியிட்டவுடன் வைரலானது. ட்விட்டர்வாசிகள் இதை ஷேர் செய்ய தொடங்கினர். சிலர், வீட்டில் செய்த உணவை எடுத்து வந்து இதுமாதிரியான சம்பவங்களை தவிர்க்குமாறு ஆலோசனை கூறினர்.
இந்தியன் ரயில்வே பதில்:
Have you ever tasted your own food @IRCTCofficial ? Will you ever give such bad quality and taste to your own family and children? It tastes like food for prisoners. The ticket prices are increasing day by day but you are providing same bad quality food to your customers. pic.twitter.com/GJYJ0eWfXP
— Bhumika (@thisisbhumika) February 12, 2023
இதற்கு இந்திய ரயில்வே சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பூமிகா என்ற பெண் புகார் அளித்தபோதிலும், அவரை சார் என குறிப்பிட்டு இந்தியன் ரயில்வே பதில் அளித்தது மேலும் விமர்சனத்திற்கு உள்ளானது. "சார், தயவுசெய்து PNR மற்றும் மொபைல் எண்ணை நேரடி செய்தியாக பகிரவம்" என இந்திய ரயில்வே பதில் அளித்தது.