பறிபோன 7 குழந்தைகளின் உயிர்.. 2 மாதங்களாக அலறவிட்ட ஓநாய்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய வனத்துறை!
கடந்த 2 மாதங்களாக 7 குழந்தைகள் உள்பட 8 பேரை கொன்றுகுவித்த ஓநாயை உத்தரப் பிரதேச வனத்துறை அதிகாரிகள் பிடித்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 2 மாதங்களாக 7 குழந்தைகள் உள்பட 8 பேரை கொன்றுகுவித்த ஓநாயை அம்மாநில வனத்துறை அதிகாரிகள் பிடித்துள்ளனர். இது, அம்மாநில மக்களை நிம்மதி பெருமூச்சு விட செய்துள்ளது.
உ.பி-யை அலறவிட்ட ஓநாய்: காடுகள் அழிக்கப்படுவதால் பல்வேறு விளைவுகள் ஏற்படுகிறது. குறிப்பாக, வனம் சாராத செயல்களுக்காக வனப்பகுதியை பயன்படுத்தப்படுவது அங்கு வாழும் உயிரினங்களுக்கு பெரும் சிக்கலை தருகிறது.
வனப்பகுதி, விவசாய நிலமாக மாற்றப்படுவதாலும் அங்கு சாலைகள் கட்டப்படுவதாலும் அங்கு போதுமான உணவு, தண்ணீர் கிடைக்காமல், வனவிலங்குகள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு செல்வது தொடர் கதையாகி வருகிறது. இதனால், மனித - வனவிலங்கு மோதல் அதிகரித்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, உத்தரப் பிரதேசம் பஹ்ரைச் மாவட்ட மக்களை ஓநாய்கள் கூட்டம் அச்சுறுத்தி வந்துள்ளது. கடந்த 2 மாதங்களில் ஓநாய் தாக்கியதில் 7 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். கடைசியாக, செவ்வாய் கிழமை இரவு, ஓநாய் தாக்கியதில் கைக்குழந்தை ஒன்று உயிரிழந்தது.
ஸ்கெட்ச் போட்டு தூக்கிய வனத்துறை: இந்த நிலையில், மாநில வனத்துறை மேற்கொண்ட முயற்சியில் மக்களை அச்சுறுத்தி வந்த ஓநாய் பிடிப்பட்டுள்ளது. அவற்றை பிடிப்பதற்காக வனத்துறை அதிகாரிகள் பட்டாசுகளை வெடிக்க செய்து, ஓநாய் கூட்டத்தை குறிப்பிட்ட பகுதியில் சிக்க வைத்துள்ளனர்.
பின்னர், அதற்கு மயக்க ஊசி செலுத்தி கோரக்பூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து தலைமை வன பாதுகாவலர் (வனவிலங்கு) சஞ்சய் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், "காலை 5 மணியளவில் ஆளில்லா விமானம் மூலம் ஓநாய் கண்காணிக்கப்பட்டது.
ஓநாய் கால்தடங்களை கண்டதையடுத்து, அப்பகுதி வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். சவாலான முயற்சிக்குப் பிறகு, காலை 10:45 மணியளவில் சிசய்யா கிராமத்தில் ஓநாயை வெற்றிகரமாகப் பிடித்தனர். மேலும், இரண்டு ஓநாய்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்றார்.
மெஹ்சி தெஹ்சில் பகுதியில் ஓநாய்களின் கூட்டத்தை பிடிக்க 'ஆபரேஷன் பேடியா' என்ற திட்டத்தை உத்தரபிரதேச அரசு சமீபத்தில் தொடங்கியது. அரசின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் இந்த நடவடிக்கையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறார். ஓநாய்களைப் பிடிக்க 16 குழுக்களை அனுப்பியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.