EWS Reservation | EWS இடஒதுக்கீடு - 8 லட்சம் ஆண்டு வருமான அளவை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு முடிவு..
பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையிலுள்ள பொதுப்பிரிவினருக்கு முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீட்டின் மூலம் பயன்பெறும் வகையில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது
பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு வேலைவாய்ப்பில் வழங்கப்பட்டு வரும் 10% இடஒதுக்கீட்டுன் ஆண்டு வருமான அளவு மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
2019 ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையிலுள்ள பொதுப்பிரிவினருக்கு முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீட்டின் மூலம் பயன்பெறும் வகையில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது.
இந்த 103வது அரசியலமைப்பு சட்டத்திருத்தின் படி, ஏற்கனவே இடஒதுக்கீட்டால் கவரப்படும் பிரிவினர்களான பட்டியலினத்தவர்(SC), பட்டியலின பழங்குடியினர்(ST), மற்றும் சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் (OBC) ஆகியோர் அல்லாத, பொதுப்பிரிவில் இடம்பெற்றுள்ளோரில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு மத்திய அரசின் கல்விநிறுவனங்களில் சேர்வதற்கும் மற்றும் மத்திய அரசுப்பணிகள் பெறுவதற்கும் 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.
ரூ.8 லட்சத்திற்கு குறைவாக குடும்ப ஆண்டு வருமானம்:
இந்நிலையில், மருத்துவ/ பல்மருத்துவ இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டு திட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27%, பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை கடந்த ஜூலை மாதம் ஒப்புதல் அளித்தது.
மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. நீதிபதிகள் சந்திரசூட், விக்ரம் நாத், நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இந்த வழக்கின் விசாரணையின் போது, முற்பட்ட வபுப்பினருக்கான ஆண்டு வருமான அளவை நீதிபதிகள் கேள்விக்கு உட்படுத்தினார்.
பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டின் பலன்களை, சமூகத்தில் முன்னேறிய நபர்கள்/பிரிவினர் (கிரீமி லேயர்) பெறுவதைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் ரூ.8 லட்சம் ஆண்டு வருமான அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், முற்பட்ட வகுப்பினர், சமுதாய நிலையிலும், கல்வி நிலையிலும் பின்தங்கியுள்ளனர் என்று வாதம் ஏற்புடையதாக இருக்காது. அப்படி இருக்கையில், இவர்களுக்கும் ஆண்டு வருமான உச்ச வரம்பு (கிரீமி லேயர்) எப்படி பொருந்தும்? ஆண்டு வருமான ரூ. 8 லட்சம் என்பது எப்படி பொருந்தும்? என்று நீதிபதி சந்திரசூட் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த கூடுதல் தலைமை வழக்கறிஞர், தேசிய வாழ்க்கைச் செலவின குறியீடு (national cost of living) அடிப்படையில் இந்த வருமான உச்சவரம்பு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும், பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற அமர்வில் இருப்பதாகவும் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த நீதிபதிகள், 103வது அரசியலமைப்பு சட்டம் செல்லுபடியாகும் தன்மையை பெரிய அமர்வு விசாரித்து வருவதாகவும், தற்போது சட்டத்தை செயல்படுத்தும் விதம் குறித்து மட்டுமே விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று ஆஜரானா சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, " முற்பட்ட வகுப்பினருக்கான ஆண்டு வருமான அளவை மறு பரிசீலனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆணையத்தை அமைத்து நான்கு வாரங்களுக்குள் தீர்வுகள் எட்டப்படும்" என்று தெரிவித்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், "முற்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு பிரச்சனையைத் தீரும்வரை முதுகலை மருத்துவ இடங்களுக்கான நேர்காணல் தள்ளி வைக்கப்படுவதாக உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை 2022, ஜனவரி ஆறாம் தேதி நடைபெற இருக்கிறது.
எனவே, முதுகலை மருத்துவ இடங்களுக்கான நேர்காணலை நான்கு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்