கணவர் தற்கொலை… ரூ.7000 கோடி கடன்.... ஒரே ஆண்டில் ‛கஃபே காஃபி டே’வை மீட்ட மாளவிகா ஹெக்டே!
ஒருபுறம் கணவர் இறந்துவிட்டார், மறுபுறம் ரூ.7,000 கோடி கடனில் இருக்கும் நிறுவனம், மறுபுறம் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வாழ்க்கை. இப்படி பல சிரமங்கள் மாளவிகா ஹெக்டேவைச் சூழ்ந்தது.
கஃபே காபி டே நிறுவனத்தின் சி.இ.ஓவான சித்தார்த்தாவின் மனைவி மாளவிகா ஹெக்டே பொறுப்பேற்றப் பிறகு கடனில் தத்தளித்த நிறுவனத்தை கரை சேர்த்து சாதித்து காட்டியுள்ளார். மாளவிகா ஹெக்டே 1969 ஆம் ஆண்டு கர்நாடகாவின் பெங்களூருவில் பிறந்தார். அவர் தனது பள்ளிப்படிப்பை பெங்களூருவில் படித்தார். பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்தார். இவரது தந்தை, சோமனஹள்ளி மல்லையா கிருஷ்ணா, ஒரு முக்கிய இந்திய அரசியல்வாதி, வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் கர்நாடக முதல்வர் போன்ற பல முக்கிய பதவிகளில் பணியாற்றியுள்ளார். இவரது தாயார் பிரேமா கிருஷ்ணா ஒரு சமூக ஆர்வலர். அவருக்கு ஒரு தங்கை, சாம்பவி கிருஷ்ணா, அவர் ஒரு தொழிலதிபர். மாளவிகா கிருஷ்ணா ஹெக்டே, பிரபல உணவுச் சங்கிலியான கஃபே காஃபி டே (CCD)யின் உரிமையாளரான VG சித்தார்த்தாவை 1991 இல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இஷான் மற்றும் அமர்த்தியா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்தியாவின் மிகப் பெரிய காபி ஷாப் நிறுவனமான கஃபே காபி டே நிறுவனர் சித்தார்த்தா 2019ஆம் ஆண்டின் ஜூலை 29ஆம் தேதி திடீரென தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மங்களூரு அருகே நேத்ராவதி நதியில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட அவரது மரணத்தில் சந்தேகம் இருந்தது. 36 மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு அவரது உடல் நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்டது. கடன் நெருக்கடி, தொழில் நஷ்டம் போன்ற காரணங்களால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார் என அவரது கடைசிக் கடிதத்தின் வாயிலாக நம்பப்பட்டது. ஆனாலும் அவர் தற்கொலைதான் செய்துகொண்டாரா என்ற சந்தேகம் காவல் துறையினரிடையே இருந்தது. ஏனெனில், அவர் வாங்கிய கடனை விட அவரது சொத்து மதிப்பு பல மடங்கு அதிகம் என்பதால் கடனை அடைக்க நிறைய வாய்ப்புகள் இருந்தன. எனவே அவரது மரணம் இன்னும் சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இருக்கிறது.
சித்தார்த்தாவின் மரணத்துக்குப் பிறகு காபி டே நிறுவனம் காணாமல் போய்விடும் எனப் பலரும் கருதினர். அவருக்குப் பிறகு யார் நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்துவார் என்ற கேள்விக்குறி இருந்தது. ஏனெனில், ஏகப்பட்ட கடன் இருந்ததால் அந்த நிறுவனம் மீண்டு வரவே முடியாது என்று அந்த நிறுவனத்தில் இருந்தவர்களே பேசி வந்தனர். ஆனால் அத்தனை பேச்சுகளையும் சுக்கு நூறாக உடைத்து தனியொரு பெண்ணாக இருந்து சாதித்துக் காட்டியுள்ளார் மாளவிகா ஹெக்டே. இவர்தான் சித்தார்த்தாவின் மனைவி. 2020ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் காபி டே நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியாக மாளவிகா பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மகள் ஆவார். அன்று முதல் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைத்தார். 2019ஆம் ஆண்டில் காபி டே நிறுவனத்துக்கு ரூ.7,000 கோடிக்கு மேல் கடன் இருந்தது. கணவனை இழந்த சோகத்தில் இருந்த மாளவிகாவுக்கு இது மிகப் பெரிய சுமைதான். ஆனால் அவர் மனம் தளரவே இல்லை. தொடர்ந்து உழைத்தார். கணவனின் மரணம் மனைவிக்கு பேரிடியாக இருந்திருக்கிறது. அந்த இழப்பு எவ்வளவு ஆழமானது, பயங்கரமானது, வேதனையானது என்பதை மாளவிகா ஹெக்டேவைப் பார்த்தால் புரியும். ஒருபுறம் கணவர் இறந்துவிட்டார், மறுபுறம் ரூ.7,000 கோடி கடனில் இருக்கும் நிறுவனம், மறுபுறம் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வாழ்க்கை. இப்படி பல சிரமங்கள் மாளவிகா ஹெக்டேவைச் சூழ்ந்தது. காபி டே நிறுவனத்துக்கு கடன் அதிகமாகிவிட்டால், கணவருக்கும் குடும்பத்துக்கும் கெட்ட பெயர். நிறுவனம் மூடப்பட்டால், ஆயிரக்கணக்கான ஊழியர்களின் குடும்பங்கள் ரோட்டில் விழும். இதையெல்லாம் கருத்தில் கொண்டே மாளவிகா அந்த நிறுவனத்தின் தலைமை பொறுப்புக்கு வந்தார்.
நிறுவனத்தின் கடன்களை நிறுவனம் நிச்சயம் திரும்பச் செலுத்தும் என தெரிவித்தார். அவர் தனது வார்த்தையைக் காப்பாற்றினார். ஒரே வருடத்தில் நிறுவனத்தின் கடன் பாதியாக குறைந்தது. 7,200 கோடியில் இருந்து ரூ.3,100 கோடி ரூபாயாக கடன் குறைந்திருக்கிறது. பின்னர் விடா முயற்சியின் பலனாக 2021ஆம் ஆண்டில் காபி டே நிறுவனத்தின் கடன் சுமை ரூ.1,731 கோடியாகக் குறைந்தது. இது மிகப் பெரிய சாதனைதான். இதற்கிடையில் கொரோனா காலம் வேறு இருந்ததால், கடைகளை திறக்க முடியாத சூழல் உருவாகி இருந்தது. அதையெல்லாம் மீறி வருவதற்கு கூர்மையான திட்டம் தீட்டி, பணியாளர்கள் சோர்வடையாமல் பார்த்துக்கொண்டார். எல்லா தடைகளையும் தாண்டி கடனை வெகுவாக குறைந்து சிங்கப்பெண்ணாக நிற்கிறார். கடன் சுமையே இல்லாமல் ஆக்கி நிறுவனத்தை கோடி கோடியாக லாபம் ஈட்ட வைப்பதே மாளவிகாவின் இலக்காக உள்ளது. இது மாளவிகா ஏற்படுத்திய மாற்றம். இது ஊழியர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியது. நிறுவனத்தின் கடினமான காலங்களில் ஊழியர்கள் ஆர்வமாக இருந்ததாகவும், வங்கிகள் பொறுமையாக காத்திருந்ததாகவும் மாளவிகா ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். மேலும், தனது கணவரின் கனவுகளை நனவாக்க பாடுபடுவேன் என்றும் அந்தப் பேட்டியில் தெரிவித்திருக்கிறார் மாளவிகா ஹெக்டே. இதுதான் பெண் சக்தி என கொண்டாடுகிறார்கள், நிறுவன ஊழியர்கள். கடன் சுமையே இல்லாமல் ஆக்கி நிறுவனத்தை கோடி கோடியாக லாபம் ஈட்ட வைப்பதே மாளவிகாவின் இலக்காக உள்ளது. இறந்த தனது கணவரின் ஆசைப்படி, காபி டே கடைகளை நாட்டின் மூலை முடுக்கெங்கும் கொண்டு செல்வதே மாளவிகாவின் கனவாக மாறியுள்ளது. சாதித்துக் காட்டுவதற்கு ஆண், பெண் என்ற வேறுபாடு தேவையில்லை. எந்த ஆதரவும், துணையும் தேவையில்லை. அதற்கு மாளவிகா ஹெக்டே ஒரு முன்னுதாரணம்.