Corona Virus: ஒரே நாளில் 6 ஆயிரமாக உயர்ந்த கொரோனா..! எந்த மாநிலங்களில் எவ்வளவு பாதிப்பு..?
இந்தியாவில் கடந்த மார்ச் இறுதி தொடங்கியே கொரோனா தொற்று பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 203 நாட்களில் இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று அன்றாட பாதிப்பு நேற்று (வியாழக்கிழமை) 6000ஐ கடந்து பதிவானது.
இந்தியாவில் கடந்த மார்ச் இறுதி தொடங்கியே கொரோனா தொற்று பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 203 நாட்களில் இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று அன்றாட பாதிப்பு நேற்று (வியாழக்கிழமை) 6 ஆயிரத்தை கடந்து பதிவானது.
ஒரே நாளில் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா:
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரே நாளில் 6,050 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 28,303 ஆக உயர்ந்துள்ளது. அன்றாட பாதிப்பு முந்தைய நாள் (புதன்கிழமை) ஏற்பட்ட 5,335 பாதிப்பைவிட 13 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 85 ஆயிரத்து 858 ஆக உள்ளது. கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 3 பேர், கர்நாடகா, ராஜஸ்தான் மாநிலங்களில் 2 பேர், டெல்லி, குஜராத் ஹரியானா, இமாச்சலப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, கொரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 943 ஆக அதிகரித்துள்ளது.
எந்த மாநிலங்களில் அதிகம்?
இந்நிலையில் மாநில வாரியாக எங்கெங்கு எவ்வளவு கொரோனா பாதிப்பு உள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதன்படி கேரளாவில் 9,422, மகாராஷ்டிராவில் 3,987, குஜராத்தில் 2,142, டெல்லியில் 2,060, இமாச்சலப் பிரதேசத்தில் 1933, கர்நாடகாவில் 1516, தமிழகத்தில் 1366 என்ற அளவில் கொரோனா தொற்று உள்ளது. இந்த மாநிலங்களில் எல்லாம் கொரோனா பரவல் 1000க்கும் அதிகமாக உள்ளது.
மாஸ்க் கட்டாயம்:
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் கொரோனா ஒமிக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காரைக்காலில் 3 தினங்களுக்கு முன்பு பெண் ஒருவர் பலி ஆனார். புதுச்சேரியில் பரிசோதிக்க கூடிய நோயாளிகளில் நோய் தொற்று இருக்கக்கூடிய நபர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் உள்ளது. அதனால், மக்கள் அதிகம் கூடும் கடற்கரை, சந்தை, பூங்கா, திரையரங்குகளில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாநில அரசுகளின் சுகாதாரத்துறை அமைச்சர்கள், தலைமை மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர்கள் பங்கேற்றனர். வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இன்றைய கூட்டத்தில் மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டன.
* அனைத்து மாநில அரசுகளும் எச்சரிக்கையுடனும் தயார் நிலையிலும் இருக்க வேண்டும்.
* கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்.
* தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும்.
* அனைத்து மருத்துவமனைகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
* கொரோனா தடுப்பு நடைமுறைகள் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
* கடந்த காலங்களில் மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டதைப் போன்று செயல்பட வேண்டும்.
* மருத்துவமனைகளின் தயார் நிலை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் வரும் 8 மற்றும் 9ம் தேதிகளில் மாநில சுகாதார அமைச்சர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
* கொரோனாவை எதிர்கொள்ள தயார் நிலை குறித்து பயிற்சி ஒத்திகைகளை மாநில சுகாதார அமைச்சர்கள் மேற்கொள்ள வேண்டும். வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் அனைத்து மருத்துவமனைகளிலும் இந்த ஒத்திகை நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.