CM Mamata Banerjee: நான் நலமாக உள்ளேன், கவலைப்பட வேண்டாம் - ஆறுதல் கூறிய மம்தா பானர்ஜி.. என்ன நடந்தது?
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இடது மூட்டு வலி காரணமாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேற்குவங்கத்தில் தொடர்ந்து மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 8ம் தேதி அம்மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் திரிணாமுல் காங்கிரசிற்கும், எதிர்க்கட்சியான பாஜகவிற்கும் நேரடி போட்டி நிலவியது. இதனால், சட்டசபை தேர்தலுக்கும், பாராளுமன்ற தேர்தலுக்கும் தருகின்ற அதே தீவிரத்தோடு மமதா பானர்ஜி, சூறாவளி பயணம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டார்.
இதனால் கடந்த ஜூன் மாதம் பாக்டோக்ரா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பங்கேற்ற பிறகு, ஜல்பைகுரி பகுதிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டுச் சென்றார். பைகுந்தபூர் வனப்பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது, கனமழை காரணமாக போதிய வெளிச்சமின்மை இல்லாத சூழல் உருவானது. இதனால் ஹெலிகாப்டரை ஓட்டி வந்த விமான ஓட்டி தடுமாறிய நிலையில், அவசர கதியில் அந்த ஹெலிகாப்டர் சிலிகுரி அருகே உள்ள செவோக் ஏர்பேஸில் தரையிறக்கப்பட்டது.
பின், கொல்கத்தாவை வந்தடைந்த மமதா பானர்ஜி உடனடியாக, எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஹெலிகாப்டர் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியில், மம்தா பானர்ஜி முதுகுத்தண்டு மற்றும் மூட்டில் வலி ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
#WATCH | West Bengal CM Mamata Banerjee arrives at SSKM Hospital in Kolkata for a routine health checkup. pic.twitter.com/8nhjbW5XSj
— ANI (@ANI) December 29, 2023
இந்நிலையில் செப்டம்பர் மாதம் ஸ்பெயின் மற்றும் துபாயில் 12 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது மீண்டும் அவருக்கு இடது மூட்டில் வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக நேற்று அரசு மருத்துவமனையான எஸ்.எஸ்.கே. எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வழக்கமான சில பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மமதா பானர்ஜி, “ நான் நலமாக உள்ளேன், கவலைப்பட வேண்டாம். நான வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக வந்தேன். தினசரி 20,000 அடிகள் நடக்கிறேன். மருத்துவர்கள் மேற்கொள்ளும் வழக்கமான பரிசோதனை பற்றி விவரித்தேன்” என தெரிவித்தார். பின அவர் தனது காரில் ஏறுவதற்கு முன் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.