வயநாடு நிலச்சரிவு: மத்திய அரசின் 'ஏமாற்று' செயல்! நீதிமன்றம் கடும் கண்டனம், நிதி ஒதுக்கீடு குறித்த கேள்வி?
மத்திய அரசிடம் பணம் இருக்கிறதா? இல்லையா? என்பதை நாட்டு மக்களால் எளிதாக புரிந்து கொள்ள முடியும். மத்திய அரசிடம் போதிய நிதி இல்லையென்றால், எந்தவொரு மாநிலத்திற்கும் உதவிக்கரம் நீட்ட முடியாது.
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கடன்களை தள்ளுபடி செய்யும் விவகாரத்தில், மத்திய அரசு மீது கேரள உயர் நீதிமன்றம் கடுமையான அதிருப்தி வெளிப்படுத்தி உள்ளது. கேரள மக்களை மத்திய அரசு ஏமாற்றி விட்டது. எங்களுக்கு அவர்கள் காட்டும் அனுதாபம் தேவையில்லை என கண்டித்துள்ளது.
கேரளாவில் மாநிலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த 2024, ஜூலை 30ம் தேதி வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். எண்ணற்ற வீடுகள் மண்ணில் புதைந்தன. உறவினர்களை இழந்து குழந்தைகள் பலர் தவித்தனர்.
இயற்கையின் இந்த கோர தாண்டவத்தால், ஒட்டுமொத்த வயநாட்டு மக்களின் வாழ்க்கையும் தலைகீழாக மாறியது. இந்நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து வங்கி கடன் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறது. முந்தைய விசாரணையின் போது ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், வங்கி கடன்களை தள்ளுபடி செய்யும் விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தில் தெளிவின்மை நீடிக்கிறது என கூறியிருந்தார். இந்நிலையில், இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் பிரமாண பத்திரத்தை அவர் தாக்கல் செய்தார். அதில், கடன்களை தள்ளுபடி செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை என, கூறப்பட்டிருந்தது.
வங்கி கடன்களை தள்ளுபடி செய்வதற்கு குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே மத்திய அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்றும், ரிசர்வ் வங்கி தான் அதற்கான வழிகாட்டுதல்களை வகுத்து இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் ஜெயசங்கரன் நம்பியார் மற்றும் ஜோபின் செபாஸ்டியன் கடும் அதிருப்தி அடைந்தனர். இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவாக ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை மத்திய அரசை கட்டுப்படுத்துகிறதா? அப்படியெனில் மத்திய அரசால் ரிசர்வ் வங்கிக்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாதா? வங்கி கடன்களை தள்ளுபடி செய்வதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை என கூறிவிட முடியாது.கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசுக்கு மனம் இல்லையா? என்ற கேள்வி தான் எழுகிறது. எனவே, அதிகாரம் இல்லை என காரணம் கூறி, அதன் பின்னால் ஒளிந்து கொள்வதை நிறுத்துங்கள். மக்களை முட்டாள்களாக்க முயற்சிக்காதீர்கள்.
மத்திய அரசிடம் பணம் இருக்கிறதா? இல்லையா? என்பதை நாட்டு மக்களால் எளிதாக புரிந்து கொள்ள முடியும். மத்திய அரசிடம் போதிய நிதி இல்லையென்றால், எந்தவொரு மாநிலத்திற்கும் உதவிக்கரம் நீட்ட முடியாது. இன்றைய நாளிதழ்கள் எங்கே? அதில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குஜராத், அசாம் போன்ற மாநிலங்களுக்கு 707.97 கோடி ரூபாய் நிதி ஒதுக்க மத்திய அரசின் உயர் மட்ட கமிட்டி ஒப்புதல் அளித்திருக்கும் செய்தி இடம் பெற்றிருக்கிறது.
இத்தனைக்கும், வயநாட்டில் நிகழ்ந்தது போன்ற மோசமான நிலச்சரிவும், வெள்ளமும் அங்கு ஏற்படவில்லை. அப்படியிருந்தும் மத்திய அரசால் 707 கோடி ரூபாயை திரட்டி தர முடிகிறது. ஹரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் வளர்ச்சி திட்டப் பணிகளை விரிவாக்கம் செய்வதற்கும் மத்திய கமிட்டி 903.67 கோடி ரூபாய் நிதி ஒதுக்க ஒப்புதல் வழங்கியிருக்கிறது. உண்மையிலேயே மத்திய அரசுக்கு துணிவு இருந்தால், வயநாடு மக்களுக்கு உதவ முடியாது என நேரடியாக கூற வேண்டியது தானே. இயற்கை பேரிடர் போன்ற மோசமான சூழலில், உதவாமல் கைவிரித்து விட்டது என்ற உண்மையாவது மக்களுக்கு தெரியட்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு இந்த நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்காது. ஏனெனில் அரசியலமைப்பை மதிக்கும் ஒரு அங்கமாக இந்த நீதிமன்றம் இருக்கிறது. போதும், எங்களுக்கு உங்கள் அனுதாபம் தேவையில்லை.அதே சமயம், மத்திய அரசு போல வெறுமனே கையை கட்டிக் கொண்டு இந்த நீதிமன்றம் சும்மா இருக்காது என தெரிவித்துள்ளது.





















