Wayanad Landslide: 280-ஐ தாண்டிய உயிரிழந்தோர் எண்ணிக்கை; சிகிச்சையில் 300 பேர்! - வயநாட்டின் வாடிய பக்கங்கள்!
கேராள மாநிலத்தில் தொடர் மழையால் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 280-ஐ தாண்டியது என தகவல்..
தமிழ்நாட்டின் மேற்கு பகுதிகளிலும், கேரளாவின் பல பகுதிகளிலும், கர்நாடகத்தின் உள் மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக அதிகனமழை பொழிந்து வருகிறது.
கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் மேப்பாடி பகுதியைச் சுற்றியுள்ள முண்டக்கை, சூரல்மலா, அட்டமலா, நூல்புழா கிராமங்களில் செவ்வாய்க்கிழமை அடுத்தடுத்து 3 முறை பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டதில் அப்பகுதிகள் உருக்குலைந்து போயுள்ளது.
இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியது.. வயநாட்டில் 115-204 மி.மீ மழை பெய்யும் என்று ஒன்றிய அரசின் வானிலை எச்சரிக்கை விடுத்தது. ஆனால் அடுத்த 48 மணி நேரத்தில் 572 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட அன்று ஆரஞ்சு எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டது. இந்த கோர சம்பவம் நிகழ்வும் முன் வரை அப்பகுதியில் ரெட் அலர்ட் விடுக்கப்படவில்லை கூறினார்.
மேலும், நிலச்சரிவு ஏற்பட்ட பின்னரே, அன்று காலை 6 மணிக்கு, ரெட் அலர்ட் விடுத்தனர். ஜூலை 29 அன்று, இந்திய புவியியல் ஆய்வு மையம், ஜூலை-30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் சிறிய நிலச்சரிவு அல்லது பாறை வெடிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று தெரிவித்தது.
இதேபோன்று ஒன்றிய நீர் ஆணையமும் இந்தப் பகுதியில் உள்ள இரண்டு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் தெரிவிக்கவில்லை.
பருவநிலை மாற்றம் தொடர்பான கடுமையான சிக்கல்கள் உள்ளன என்பதை ஒன்றிய அரசும் உணர வேண்டும். கடந்த காலங்களில், இப்போது நாம் பார்ப்பது போல் அதிக மழை பெய்ததை பார்த்திருக்கிறோமா? நமக்கு காலநிலை மாற்றத்தினை தணிக்கும் முயற்சிகள் தேவை என தெரிவித்தார்.
இதனிடையே, தமிழ்நாடு அரசின் சார்பில், ரூ. 5 கோடிக்கான காசோலையை, அமைச்சர் எ.வ. வேலு கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து வழங்கினார்.
இரண்டு நாட்களாக மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 282-ஐ எட்டியுள்ளது.
மாயமானவர்கள் எண்ணிக்கை 300க்கும் அதிகமாக இருக்கும் நிலையில், பலி எண்ணிக்கை கூடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மோசமான வானிலைக்கு இடையே 3-வது நாளாக ராணுவம், கடற்படை, விமானப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, காவல் துறையினர், தீயணைப்புப் படையினர் உள்ளிட்ட பல்வேறு முகமைகள் முழுவீச்சில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ராணுவ வீரர்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர், 1,500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக மேப்பாடி பகுதியில், 8 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் 421 குடும்பங்களைச் சேர்ந்த 1,486 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வயநாடு மாவட்டத்தில் தற்போது மொத்தம் 82 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் 2,000க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நூற்றுக்கணக்கானோர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருப்பதால், மேலும் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று தகவல் தெரிவிக்கபடுகிறது.