Watch Video: பிரதிபா பாட்டிலின் வழியை பின்பற்றும் திரௌபதி முர்மு! மெட்ரோ ரயிலில் பள்ளி மாணவர்களுடன் ஜாலி பயணம்!
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று டெல்லி மெட்ரோவில் பயணம் செய்து பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Watch Video: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று டெல்லி மெட்ரோவில் பயணம் செய்து பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மெட்ரோவில் பயணம் செய்த குடியரசுத் தலைவர் முர்மு:
நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு கடந்ந 2022ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி பதவியேற்றார். இந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இன்று டெல்லி மத்திய செயலக மெட்ரோ நிலையம் (கேட் எண் 4) மற்றும் அம்ரித் உத்யன் (கேட் எண் 35) இடையிலான பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர், மத்திய செயலக மெட்ரோ நிலையத்தில் மெட்ரோ ரயிலில் ஏறிய அவர், நேரு பிளேஸ் மெட்ரோ நிலையம் வரை பயணித்து, பின்னர், மத்திய செயலகத்திற்கு திரும்பினார். என்.சி.எம்.சி (National Common Mobility Card) பயண அட்டையை பயன்படுத்தி மத்திய செயலக மெட்ரோ நிலையத்தில் இருந்து நேரு பிளேஸ் வரை பயணம் செய்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு .
#WATCH | President Droupadi Murmu interacts with school students during her ride in the Delhi metro. pic.twitter.com/Lhs7K4sM1r
— ANI (@ANI) February 7, 2024
இந்த பயணத்தின்போது டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குநர் விகாஸ் குமார், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுடன் இருந்தார். இவர், மெட்ரோ ரயிலின் செயல்பாடுகள் மற்றும் பல்வேறு அம்சங்களைப் பற்றி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு விளக்கினார்.
"எனது பயணம் இனிமையாக இருந்தது”
மேலும், மெட்ரோ ரயிலின் கட்டுமானத் திட்டங்கள் குறித்த தகவல்களையும் கூறினார். இதனை தொடர்ந்து, மெட்ரோ ரயிலில் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து, அவர்களுடன் கலந்துரையாடினார் திரௌபதி முர்மு. மாணவர்களின் எதிர்கால லட்சியங்களை பற்றி விசாரித்தார் திரௌபதி முர்மு. இது சம்பந்தமான காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ரயில் பயணம் குறித்து பார்வையாளர்கள் புத்தகத்தில் கருத்து பதிவிட்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ”டெல்லி மெட்ரோ இன்று உலகின் மிக நவீன போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. டெல்லி மெட்ரோ நிர்வாகத்திற்கு எனது பாராட்டுகளை தெரிவிக்கிறேன். எனது பயணம் இனிமையாக இருந்தது” என்று குறிப்பிட்டிருந்தார்.
2012ல் பிரதீபா பாட்டில்:
குடியரசுத் தலைவராக பதவியேற்ற பிறகு திரௌபதி முர்மு மெட்ரோ ரயிலில் பயணம் செய்வது இதுவே முதல்முறையாகும். அதேபோல, டெல்லி மெட்ரோவில் பயணம் செய்த 2வது இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆவார். கடந்த 2012ஆம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.