Waqf Bill: ரைட்ரா..! நள்ளிரவில் சட்டமானது வக்பு திருத்த மசோதா..! ஒப்புதல் கொடுத்த குடியரசு தலைவர் திரவுபதி முர்மு
Waqf Bill: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, வக்பு வாரிய திருத்த மசோதாவிற்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

Waqf Bill: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்ட, வக்பு வாரிய திருத்த மசோதாவிற்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் அந்த மசோதா தற்போது சட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
சட்டமானது வக்பு வாரிய திருத்த மசோதா:
வக்பு சொத்துக்களை தவறாக பயன்படுத்துதல் மற்றும் ஆக்கிரமிப்புகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த சட்டம் கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது, பல எதிர்க்கட்சிகளும் இஸ்லாமிய அமைப்புகளும் அதன் விதிகளை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன. இந்நிலையில் தான், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்ட, வக்பு வாரிய திருத்த மசோதாவிற்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
The Waqf(Amendment) Act, 2025 receives the assent of President Droupadi Murmu on April 5. pic.twitter.com/E3P7Sx71zH
— ANI (@ANI) April 5, 2025
வக்பு வாரியத்தில் சீர்திருத்தங்கள் என்ன?
அதிகாரப்பூர்வ அரசாணையின் அறிவிப்பின்படி, வக்பு (திருத்தம்) சட்டம், 2024, பல கட்டமைப்பு சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துகிறது, அதில்,
- மாநில வக்பு வாரியங்களில் பாஸ்மண்டா மற்றும் ஏழை முஸ்லிம்களுக்கு கட்டாய பிரதிநிதித்துவம்
- வக்பு சொத்துக்களின் பதிவு, பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டிற்கான கடுமையான விதிகள்.
சிறப்பு வக்பு தீர்ப்பாயங்கள் மூலம் ஆக்கிரமிப்பு வழக்குகளை காலக்கெடுவுக்குள் தீர்த்து வைப்பது - தணிக்கை மற்றும் பொறுப்புக்கூறல் வழிமுறைகள், வக்பு வாரியங்களின் வருடாந்திர தணிக்கைகளை கட்டாயமாக்கி, மாநில அரசுக்கு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- வக்பு என சொத்துக்களை "சரிபார்க்கப்படாத அல்லது மோசடியான பதிவு" செய்வதற்கு தடை
- வக்பு வாரியங்களின் அமைப்பை விரிவுபடுத்தவும் மேற்பார்வையை வலுப்படுத்தவும், 1995 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வக்பு சட்டத்தின் பல பிரிவுகளை, குறிப்பாக பிரிவு 14 மற்றும் பிரிவு 32 ஐ இந்தச் சட்டம் திருத்துகிறது.
"வக்பு சொத்துக்களின் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருதல், உண்மையான வக்பு பயனாளிகளின் நலனைப் பாதுகாத்தல் மற்றும் ஒதுக்கப்பட்ட இஸ்லாமிய சமூகங்களுக்கு முறையான பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதை உறுதி செய்தல்" ஆகியவற்றை இந்த திருத்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் வழக்குகள்:
ஆம் ஆத்மி கட்சி (AAP), காங்கிரஸ் மற்றும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) ஆகிய கட்சிகளின் தலைவர்கள் புதிய சட்டத்தின் அரசியலமைப்பு செல்லுபடிக்கு எதிராக கேள்வி எழுப்பி உச்ச நீதிமன்றத்தில் தனித்தனி மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த மசோதா அரசியலமைப்பின் பிரிவுகள் 14, 15, 21, 25, 26, 29, 30 மற்றும் 300-A ஐ மீறுவதாகவும், மத மற்றும் கலாச்சார சுயாட்சியைக் குறைப்பதாகவும், தன்னிச்சையான நிர்வாக தலையீட்டை செயல்படுத்துவதாகவும், சிறுபான்மையினரின் உரிமைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் வாதிடுகின்றன. தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக உள்ள திமுகவும், நீதிமன்றத்தை நாட உள்ளதாக அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

