Bomb threat: "ஒரு மணி நேரத்தில் வெடிக்கும்" விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. உச்சக்கட்ட பரபரப்பு
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, இந்திரா காந்தி சர்வதேச (ஐஜிஐ) விமான நிலையத்தின் முனையம் 3இல் தேடுதல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.
டெல்லியில் இருந்து புனேவுக்கு செல்லவிருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விஸ்தாரா விமானம் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தில் 8 மணி நேரம் தாமதத்திற்கு பிறகே இயக்கப்பட்டது.
விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்:
காலை 7:38 மணிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர் குழு, இதை மதியம் 2:15 மணிக்கு பொய்யான தகவல் என அறிவித்தனர். விரிவான பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு விமானத்தை இயக்குவதற்கு விமான நிறுவனத்திற்கு பாதுகாப்பு அனுமதி வழங்கப்பட்டது.
காலை 8:30 மணிக்கு புறப்படவிருந்த UK971 விமானம், இறுதியாக மாலை 4.30 மணிக்கு புறப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அந்த விமானத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகளும் ஐந்து விமான நிறுவன பணியாளர்களும் இருந்தனர். கட்டாய பாதுகாப்பு சோதனைகளின் காரணமாக UK971 விமானம் தாமதமாக இயக்கப்பட்டதாக விஸ்தாரா விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
டெல்லி விமான நிலையத்தில் உச்சக்கட்ட பரபரப்பு:
இதுகுறித்து டெல்லியின் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "குருகிராமில் உள்ள டெல்லி இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட் (DIAL) கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் அழைப்பு வந்தது. மத்திய தொழில் பாதுகாப்புப் படை மூலம் அந்த அழைப்பு குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, இந்திரா காந்தி சர்வதேச (ஐஜிஐ) விமான நிலையத்தின் முனையம் 3இல் தேடுதல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். நாங்கள் விமானத்தின் உள்ளேயும் வெளியேயும் சோதனை செய்தோம். ஆனால், சந்தேகத்திற்குரிய எதுவும் கிடைக்கவில்லை. மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.
"ஒரு மணி நேரத்தில் வெடிக்கும்"
"42ஆவது வாயிலில் நிறுத்தப்பட்ட UK971 விமானத்தில் மூன்று குண்டுகள் இருக்கிறது. அவை ஒரு மணி நேரத்தில் வெடிக்கும்" என வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கூறியதாக விமான நிலையத்தின் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதை தெரிவித்துவிட்டு, அவர் அழைப்பை துண்டித்துவிட்டார்.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவுடன், வெடிகுண்டு நிபுணர் குழு (பிடிஏசி) அழைக்கப்பட்டது. வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் மற்றும் மோப்ப நாய்களை பயன்படுத்தி மத்திய தொழில் பாதுகாப்பு படை சோதனை செய்தனர். பயணிகளின் பைகள் மீண்டும் சோதனைக்கு அனுப்பப்பட்டன.
இதுகுறித்து விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "பாதுகாப்பு அமைப்புகளுக்கு முழு ஒத்துழைப்பை தந்தோம். ஆகஸ்ட் 18ஆம் தேதி, டெல்லியில் இருந்து புனேவுக்கு செல்ல திட்டமிடப்பட்ட UK971 விமானம், கட்டாயப் பாதுகாப்புச் சோதனைகள் காரணமாக தாமதமானது என்பதை உறுதிப்படுத்துகிறோம்" என குறிப்பிடப்பட்டது.