80 ஏக்கருக்கு கஞ்சா சாகுபடி.. தலைசுற்றிப்போன போலீசார்.. அடுத்தடுத்து அதிர்ச்சி!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 80 ஏக்கர்களுக்கும் மேலாக இருந்த கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டன.
'ஆபரேஷன் பரிவர்த்தனா’ என்ற பெயரில் இது தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி மாநிலத்தில் உள்ள கஞ்சா செடிகள் அடையாளம் காணப்பட்டு அழிக்கப்படும். அதேபோல கஞ்சா பயிரிடுவதற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேட்டிலைட் படங்கள் மற்றும் ட்ரோன்களின் உதவியோடு காவல்துறை, வருவாய் மற்றும் வனத் துறைகள், ஐடிடிஏ (ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு நிறுவனம்) மற்றும் சிறப்பு அமலாக்கப் பணியகம் (SEB) ஆகியவற்றின் அதிகாரிகள் கஞ்சா சாகுபடியைக் கண்டறியும் பணியில் ஈடுபடுவார்கள். ஆபரேஷனின் முதல்நாளான நேற்று கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருந்த விசாகப்பட்டினத்தில் ஜி மடுகுலா மண்சல் அருகே உள்ள கிராமங்களில் 80 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டன.
இதேபோன்ற நடவடிக்கைகள் ஏஜென்சிகளால் பகுதியில் அடையாளம் காணப்பட்ட அனைத்து இடங்களிலும் நடத்தப்படும் என்றும் அங்கு கஞ்சா தோட்டம் அல்லது கஞ்சா இருந்தால் அவை படிப்படியாக அழிக்கப்படும் என்று SEB கமிஷனர் வினீத் பிரிஜ்லால் தி தெரிவித்துள்ளார். நவம்பர் 30ஆம் தேதிக்குள் 15,0000 ஏக்கர் அளவிலான கஞ்சா தோட்டங்களை அழிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கஞ்சா பயிரிடப்படும் பகுதிகளை கண்டறிய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார். கஞ்சா தோட்டங்களைக் கண்டறிய செயற்கைக்கோள் படங்கள், ஜிபிஎஸ் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று விசாகப்பட்டினம் கிராமப்புற காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) பி கிருஷ்ணாராவ் கூறினார்.
இந்தப்பகுதிகளில் கஞ்சா சாகுபடியின் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை போலீசார் நடத்தவுள்ளார்கள் என தெரிவித்த அவர் கஞ்சா பயிர்களை தானாக முன்வந்து அழித்து மாற்றுப் பயிர்களுக்கு மாறுமாறும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
முன்னதாக கடந்த செப்டம்பர் 22 அன்று, ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து இந்தியாவுக்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருட்களை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் பறிமுதல் செய்தது. குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் இரண்டு கண்டெய்னர்கள் முழுவதும் சுமார் 2988 கிலோ எடை அளவில் ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் அதன் ஜிஎஸ்டி எண் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனத்திற்கு சொந்தமானது என தெரியவந்து அது தொடர்பானவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ஆந்திரா போதைப்பொருட்களின் மையமாக மாறியுள்ளதாக அம்மாநில எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மேலும் மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் நுகர்வு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
NREGA Demand: நிதி நெருக்கடியில் ஊரக வேலைவாய்ப்பு திட்டம் - ஊதியம் பெறாமல் மக்கள் தவிப்பு..