Watch: படமெடுத்து நிற்கும் பாம்புடன் ஜாலியாக விளையாடும் பசு… ஐ.எஃப்.எஸ். அதிகாரி வெளியிட்ட விசித்திரமான வீடியோ!
அந்த பசு பாம்பின் முகத்தை தனது நாக்கால் நக்கியது. நக்கும்போது பாம்பின் விரிந்த முகம் சுருங்கியது. அவற்றுக்கிடையே பயமோ, சண்டையோ போன்ற எந்த அறிகுறியும் இல்லாதது காண்போரை வியக்க செய்தது.
எலன் மஸ்க் வாங்கிய பின் X ஆக மாறிய டிவிட்டரில் பகிரப்பட்ட வீடியோவில் பசுவும் பாம்பும் விளையாடும் விசித்திரமான காட்சி வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தின் வீடியோவை இந்திய வன சேவை அதிகாரி சுசாந்தா நந்தா பகிர்ந்துள்ளார்.
பசுவும் பாம்பும் விளையாடும் வீடியோ
இந்த 17 வினாடி வீடியோவில் அடர் சிவப்பு நிற பசு ஒன்று, பாம்புடன் நேரெதிராக பார்த்துக் கொண்டிருப்பதை காண முடிகிறது. அந்த பாம்பு படமெடுத்த நிலையில் இருந்தாலும் அச்சுறுத்தும் விதமாக எதுவும் செய்யாமல் பார்த்துக்கொண்டிருந்தது. பின்னர் அந்த பசு பாம்பின் முகத்தை தனது நாக்கால் வாஞ்சையுடன் வருடியது. பாம்பை பசு தனது நாக்கால் வருடும்போது பாம்பின் விரிந்த முகம் சுருங்கியது. அவற்றுக்கிடையே பயமோ, சண்டையோ போன்ற எந்த அறிகுறியும் இல்லாதது காண்போரை வியக்க செய்தது.
சுஷாந்த் நந்தா பகிர்ந்த விடியோ
சுஷாந்த் நந்தா இந்த வீடியோவைப் பகிர்ந்து, "விளக்குவது கடினம். இது முழுக்க முழுக்க புனிதமான அன்பின் மூலம் பெற்ற நம்பிக்கை" என்று எழுதினார். பசு மற்றும் பாம்பின் இந்த வித்தியாசமான வீடியோ சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இது கடந்த 15 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 3 லட்சம் பார்வைகளைக் குவித்துள்ளது. சமூக ஊடகத் தளமான டிவிட்டர் X இல் கிட்டத்தட்ட 5,000 லைக்குகளை பெற்றுள்ளது. பல பயனர்கள் இந்த பதிவின் கீழ் சுவாரஸ்யமான கமெண்டுகளை தெரிவித்துள்ளனர்.
இயற்கை சுவாரஸ்யமானது
"இயற்கை சிக்கலானது. இயற்கையை அனுபவத்தின் மூலம் மட்டுமே நீங்கள் புரிந்து கொள்ள முடியும். இயற்கையை விரிவாகப் பார்ப்பது மிக மிக சுவாரஸ்யமானது. இன்றும் கூட என் மனதில் தற்செயலாக நினைவுக்கு வரும், நான் பார்த்த சில விஷயங்கள் என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றன," என்று ஒருவர் கமென்ட் செய்திருந்தார்.
Difficult to explain. The trust gained through pure love 💕 pic.twitter.com/61NFsSBRLS
— Susanta Nanda (@susantananda3) August 3, 2023
கமெண்டுகள்
"அன்பின் அழகான வெளிப்பாடு. இன்றைய உலகில், இந்த அழகான ஆத்மாக்களிடமிருந்து மனிதகுலம் கற்றுக்கொள்ள வேண்டும்" என்று மற்றொருவர் எழுதினார். "இந்த அன்பை நம்மால் விவரிக்க முடியாமல் இருக்கலாம், ஆனால், அவை அவற்றின் சொந்த மொழியில் பேசிக்கொள்கின்றன. இது மனித புரிதலுக்கு அப்பாற்பட்டது" என்று இன்னொருவர் கருத்து தெரிவித்தார். வழக்கம்போலவே சில பயனர்கள் வீடியோவின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கினர். "இது வெறுமனே தயாரிக்கப்பட்ட வீடியோ. ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான கால்நடைகள் பாம்புக்கடியால் இறக்கின்றன. மேலும் இவை இரண்டும் நட்பு பாராட்டுகின்றன என்பது குறித்த நம்பகமான தரவுகள் எதுவும் விடியோவில் இல்லை" என்று ஒரு பயனர் வீடியோவின் நம்பகத்தன்மை மீது கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் ஒருவர், "அந்த இரண்டு உயிரினங்களும் அந்த 17 நொடிகளுக்கு சண்டை செய்துகொள்ளவில்லை என்பது மட்டுமே அதில் தெரிகிறது," என்று கூறினார்.