110 இடங்களை வென்ற விஜய் மக்கள் இயக்கம் முதல் ரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா வரை.. இன்றைய முக்கிய செய்திகள்
110 இடங்களை வென்ற விஜய் மக்கள் இயக்கம் முதல் ரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா வரை.. இன்றைய முக்கிய செய்திகள் என்னவென காணலாம்
தமிழ்நாடு:
தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரும் மசோதா தொடர்பாக, தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.
நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக மாபெறும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுகிறது என்ற நம்பிக்கையுடன் வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி என கூறியுள்ளார்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தொடர்பாக இபிஎஸ் - ஓபிஎஸ் இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், “ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெற்ற வெற்றி புறவாசல் வழியாக பெற்ற வெற்றி. திமுகவின் புறவாசல் வெற்றியை சட்டதின் முன்னும், ஜனநாயகத்தின் முன்னும் வெளிப்படுத்துவோம். பல இடங்களில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர்களை தோல்வியடைந்ததாக அறிவித்துள்ளார்கள். அதிமுக வேட்பாளர்களின் வெற்றியை அறிவிக்கத் தேர்தல் ஆணையம் முனைப்பு காட்டவில்லை. பல இடங்களில் வாக்கு எண்ணிக்கையை உள்நோக்கத்தோடு தாமதப்படுத்தினர்'' எனத் தெரிவித்துள்ளனர்.
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 110 பேர் வெற்றிபெற்றுள்ளனர். பாமக 47 ஒன்றிய கவுன்சிலர் இடங்களை வென்றுள்ளது.. அமமுக 4 இடங்களில் வென்றுள்ளது. நாம் தமிழர் கட்சி ஒரு ஒன்றிய கவுன்சிலர் இடங்களைக் கூட வெல்லவில்லை.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் பா.ம.கவின் வெற்றி கவுரவமானது, மரியாதைக்குரியது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறைகளைத் தொடர்ந்து தொடர் விடுப்பு எடுக்க ஏதுவாக சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாகப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆசிரியர் சங்கங்களில் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள், ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள், ஆண்டு வருமானம் அதிகம் பெறுவோர் உள்ளிட்டோருக்கு ரேஷனில் அரிசி வழங்கப்படாது என்று வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல்கள் வேகமாக பரவிய நிலையில் சமூக ஊடகங்களில் பரவிவரும் இதுகுறித்த செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என தமிழக அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கடலூர் எம்.பி. ரமேசுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளி கோவிந்தராஜ் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீசாருக்கு ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்தவுடன் முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் பணிகளை தொடங்கி விடுவோம் என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
வானிலை:
நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், சேலம், ஈரோடு, திருவள்ளூர், வேலுார், திருப்பத்துார் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியா:
கேரளாவில் வரதட்சணைக்காக மனைவியை பாம்பைவிட்டு கடிக்க வைத்து கொலை செய்த வழக்கில் சூரஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விஷம் மூலம் காயம் ஏற்படுத்தியதற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஆதாரங்களை அழிக்க முயற்சித்ததற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைபாட்டின் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மகாத்மா காந்தியின் வேண்டுகோளுக்கு இணங்கவே சாவர்க்கர் பிரிட்டிஷ் அரசுக்கு மன்னிப்பு கடிதங்களை எழுதினார் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஆனால், அது குறித்த ஆதாரங்களை அவர் வெளியிடவோ சுட்டிக்காட்டவோ இல்லை.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி வன்முறை சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் குடியரசுத் தலைவரை சந்தித்து மனு அளித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி, தனது சுதந்திர தின உரையில் கூறிய கதி சக்தி திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். பி.எம்.கதிசக்தி - நேஷ்னல் மாஸ்டர் பிளான் என அழைக்கப்படும் இந்த திட்டம் 100 லட்சம் கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது. பல்முனை இணைப்பை ஏற்படுத்துவதன் மூலம் உள்கட்டமைப்பு திட்டங்களின் செலவைக் குறைத்து, பொருளாதாரத்தை மேம்படுத்துவது இந்த திட்டத்தின் நோக்கம்.
அமெரிக்கப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் , லக்கிம்பூரில் நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டது குறித்து பிரதமரோ, மூத்த அமைச்சர்களோ எதுவும் கூறாது ஏன் எனவும், யாராவது இதுகுறித்து கேள்விகேட்டால் ஏன் தற்காத்துக் கொள்ளும் நடைமுறை பின்பற்றப்படுகிறது என கேள்வியெழுப்பப்பட்டது.
உலகம்:
ரஷியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மந்தமான உள்ளது. இதனால், அந்நாட்டில் வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. இதனால், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. 28,190 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று 10 கோடிக்கும் மேற்பட்ட மக்களை வறுமையில் தள்ளிவிட்டது என ஐ.நா. சபை தகவல் தெரிவித்துள்ளது.