Vande Bharat Train: பயணிகளே! படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் - எப்போது வருகிறது?
செப்டம்பர் மாதத்திற்குள் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் தயாராகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து சேவையை வழங்கும் துறையாக திகழ்வது ரயில்வே துறை. ரயில்களை நவீனப்படுத்துவதற்காக மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய அதிவேக ரயிலாக வந்தே பாரத் ரயில் உள்ளது.
படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்:
நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் விதத்தில் பல வந்தே பாரத் ரயில் இயங்கிக் கொண்டிருக்கிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், டெல்லி, ஹைதரபாத் போன்ற பெருநகரங்களை இணைக்கும் விதத்தில் வந்தே பாரத் ரயில்கள் இயங்கிக் கொண்டிருக்கிறது.
நாடு முழுவதும் இணைக்கும் விதத்தில் வந்தே பாரத் ரயிலை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலானது இருக்கை வசதி கொண்ட கார் வடிவிலான வந்தே பாரத் ரயில்கள் ஆகும். இதில் பயணிகளின் வசதிக்காக வந்தே பாரத்தின் அடுத்த கட்ட ரயிலை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
செப்டம்பருக்குள் தயார்:
அதாவது, படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலை இயக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கான ரயில் பெட்டிகளும் பெங்களூரில் தயாராகிக் கொண்டிருக்கிறது. படுக்கை வசதி கொண்ட 9 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் தயாராகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த ஓரிரு மாதங்களாக மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று பெட்டிகள் தயாராகிக் கொண்டிருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நாட்டின் அனைத்து முக்கிய வழித்தடங்களிலும் அடுத்த 4 ஆண்டுகளுக்குள் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் உருவாக்கப்பட்ட பிறகு பாட்னா – டெல்லி இடையே 16 பெட்டிகள் கொண்ட படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கட்டணம் குறைக்கப்படுமா?
அதிநவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள வந்தே பாரத் ரயில் மற்ற ரயில்களை காட்டிலும் அதிவேகமாக செல்வதால் பல பயணிகளுக்கு வசதியாக உள்ளது. ஆனால், வந்தே பாரத் ரயிலின் கட்டணமானது மிக மிக அதிகளவில் இருப்பதால் சாமானியர்கள் அதில் பயணிப்பது மிகவும் சவாலானா ஒன்றாகவும், இயலாத ஒன்றாகவும் உள்ளது. இதனால், வந்தே பாரத் ரயிலின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.