Watch Video : அதிவேக ’வந்தே பாரத்’ ரயில் சோதனை ஓட்டம்.. 180 கி.மீ வேகத்தைக் கடந்து சாதனை! வாவ் வீடியோ
கோட்டா-நாக்டாவில் 225 கிமீ பகுதிக்கான இரண்டாம் கட்ட சோதனை ஓட்டத்தின் போது இந்த சாதனையை வந்தே பாரத் புரிந்துள்ளது.
'ரயில் 18' என அழைக்கப்படும் இந்தியாவின் அதிவேக ரயிலான 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' ரயில், முன்னதாக சோதனை ஓட்டத்தின்போது 180 கிமீ வேகத்தைக் கடந்து சாதனை புரிந்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வனி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
கோட்டா-நாக்டாவில் 225 கிமீ பகுதிக்கான இரண்டாம் கட்ட சோதனை ஓட்டத்தின் போது இந்த சாதனையை வந்தே பாரத் புரிந்துள்ள நிலையில், இது குறித்து அஷ்வினி வைஷ்ணவ் முன்னதாக தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
#VandeBharat-2 speed trial started between Kota-Nagda section at 120/130/150 & 180 Kmph. pic.twitter.com/sPXKJVu7SI
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) August 26, 2022
சென்னையில் தயாரிக்கப்பட்டது
சென்னை ஐசிஎப் ஆலையில் தயாரிக்கப்பட்ட இந்த 3ஆவது வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் முன்னதாக சென்னையில் நடைபெற்றது. இந்த ரயில் சென்னையிலிருந்து பாடி வரை வெற்றிகரமாக சோதனை பயணத்தை முடித்தது.
தற்போது, டெல்லியில் இருந்து கத்ரா மற்றும் டெல்லியில் இருந்து வாரணாசி வரை என இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு 75ஆவது சுதந்திர தின அமுதப்பெருவிழா கொண்டாட்டத்தின்போது நாடு முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அதிவேக வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக அடுத்த ஆண்டு ஆகஸ்டு 15ஆம் தேதிக்குள் 75 வந்தேபாரத் ரெயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
வந்தே பாரத் ரயிலின் சிறப்புகள்
ரெயில்-18 என்று பெயரிடப்பட்டுள்ள வந்தே பாரத் ரயில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளைக் கொண்டது. இந்த ரெயில் நாட்டின் அதிவேக ரெயிலாகக் கருதப்படுகிறது. மினி புல்லட் ரெயில் என்றழைக்கப்படும் இந்த ரெயில் 2019ஆம் ஆண்டு தன் முதல் சேவையைத் தொடங்கியது.
வந்தே பாரத் ரயில் 200 கிமீ வேகத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, மொத்தம் 16 கோச்சுகள் இந்த ரயிலில் உள்ளன. சதாப்தி எக்ஸ்பிரஸில் பயணிக்கும் அதே எண்ணிக்கையிலான பயணிகளை (1100க்கும் மேற்பட்ட பயணிகள்) இதில் ஏற்றிச் செல்ல முடியும்.
வந்தே பாரத் இரு முனைகளிலும் ஏரோடைனமிக் முறையில் வடிவமைக்கப்பட்ட ஓட்டுநர் கேபின்களைக் கொண்டுள்ளது.
புதிய வந்தே பாரதத் ரயிலில் பயணிகளின் சாய்வு இருக்கையில் புஷ்பேக் வசதி உள்ளது. ரயிலில் பயணிகள் புகைபிடிக்கும் போது அலாரம் ஒலிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவசரகாலத்தில் ஓட்டுநருடன் பேசுவதற்கு ஏதுவாக ஒவ்வொரு பெட்டியிலும் நான்கு மைக்குகளும் சுவிட்சுகளும் பொருத்தப்பட்டுள்ளன.
ரயிலில் திடீரென தீப்பற்றினால் கதவுகள் மற்றும் ஜன்னல்களை எளிதாகத் திறக்கும் வகையில் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜிபிஎஸ் வசதிகளும் உள்ளன.
நிதி அமைச்சர் அறிவிப்பு
முன்னதாக 2022 - 23ஆம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தபோது, நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் 400 வந்தே பாரத் ரெயில்கள் அறிமுகப்படுத்தப்படும். வந்தே பாரத் திட்டத்தின்கீழ் இந்த ரயில்கள் கொண்டு வரப்படுகின்றன. சிறந்த ஆற்றல் திறன்கொண்ட புதிய தலைமுறை வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.