Uttarkashi Tunnel Collapse: 14வது நாளை தொட்ட மீட்பு பணிகள்.. இன்றாவது மீட்கப்படுவார்களா? நெருங்கிய கடைசி கட்டம்..!
இன்றாவது சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களையும் மீட்பார்களா என்பது தெரியவில்லை. இருப்பினும், மீட்பு பணிக்காக கடைசி கட்ட தோண்டும் பணியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் யமுனோத்ரிதேசிய நெடுஞ்சாலையில் கட்டுமானத்தில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதைக்குள் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இன்னும் முடிவடையவில்லை. இன்றுடன் இந்த மீட்பு பணி தொடங்கி 14வது நாளாகிறது. இன்றாவது சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களையும் மீட்பார்களா என்பது தெரியவில்லை. இருப்பினும், மீட்பு பணிக்காக கடைசி கட்ட தோண்டும் பணியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்தி நிறுவனமான ஐஏஎன்எஸ் அறிக்கையின்படி, நேற்று (நவம்பர் 24) இரவு 47 மீட்டர் வரை தோண்டப்பட்ட துளையிடும் பணி இடையில் இருந்த இரும்பு கம்பியின் நிறுத்தப்பட்டது. இது குறித்து என்எச்ஐடிசிஎல் பொது மேலாளர் கர்னல் தீபக் பாட்டீல் கூறியதாவது: சுரங்கத்தின் நடுவே தோண்டப்படும் இயந்திரத்தின் முன் மீண்டும் மீண்டும் இரும்பு பொருட்கள் வருவதால் பணி தோண்டும் பணி அதிகளவில் பாதிக்கப்படுகிறது. இதுவரை 47 மீட்டர் வரை தோண்டும் பணி நடந்துள்ளது. இன்னும் பத்து மீட்டர் தோண்டும் பணி மட்டுமே எஞ்சியுள்ளது” என தெரிவித்தார்.
இன்று மீண்டும் தொடங்கப்படும் பணி:
இன்று மீண்டும் பதிக்கப்படும் குழாய்க்கு இடையில் வரும் இரும்பு கம்பிகள் அறுக்கப்பட்டு, அகற்றப்பட்டு மீண்டும் தோண்டும் பணி தொடங்கும் என செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. துளையிடும் இயந்திரம் ஒரு மணிநேரத்தில் சுமார் 2 மீட்டர் வரை மட்டுமே துளையிடுகிறது. எனவே, இன்றும் மீட்பு பணி தொடங்கப்பட்டு அவர்கள் இன்றாவது மீட்கப்படுவார்களா என்று பொறுந்திருந்து பார்க்க வேண்டும்.
மீட்பு பணியில் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி:
41 தொழிலாளர்கள் மீட்கப்படும் வரை உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, சுரங்கம் தோண்டும் இடத்திற்கு அருகே முகாமிட்டு தங்கியுள்ளார். இங்கு தற்காலிக முகாமை அமைத்து, அங்கு இருந்து மற்ற பணிகளை செய்து வருவதுடன், மீட்பு பணிகளையும் கண்காணித்து வருகிறார். முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், “இது மிகவும் சவாலான மற்றும் அபாயகரமான மீட்பு நடவடிக்கை. எங்கள் குழுக்கள் முழுத் திறனுடன் இந்த மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளோம்” என தெரிவித்திருந்தார்.
தகவல்களை கேட்டறியும் பிரதமர் மோடி:
நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகள் பிரதமர் அலுவலகத்திலிருந்து (PMO) நேரடியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி, முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியை தினமும் அழைத்து மீட்பு பணிகள் குறித்த தகவலை பெற்று வருகிறார். சிறந்த மருத்துவ சிகிச்சை மற்றும் தொழிலாளர்கள் வெளியேறும் போது வீடுகளுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
என்ன நடந்தது..?
தீபாவளி அன்று காலை அதாவது நவம்பர் 12 ஆம் தேதி, கட்டுமானத்தில் இருந்த சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததால் 41 தொழிலாளர்கள் அதில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க, 80 செ.மீ., விட்டம் கொண்ட குழாய் கொண்டு வரப்பட்டு, அதில் ரோலிங் ஸ்ட்ரெச்சர் வைக்கப்பட்டு, தொழிலாளர்களை படுக்க வைத்து, வெளியில் இழுத்து மீட்கப்படுவார்கள். அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள என்.டி.ஆர்.எப்., பணியாளர்கள் ஒத்திகை மேற்கொண்டனர்.ஆனால், கடைசி குழாய் பதிக்கும் பணியில், மீண்டும் மீண்டும் தடைகள் ஏற்பட்டதால், துளையிடும் பணியை நிறுத்த வேண்டியுள்ளது. சம்பவம் நடந்த நாள் முதல், உள்ளே சிக்கிய தொழிலாளர்களுக்கு குழாய்கள் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் அனைவரும் நலமாக உள்ளனர்.