"7:30 மணிக்கு நீங்க ஏன் வெளிய வந்தீங்க" பாலியல் தாக்குதலுக்கு ஆளான பெண்ணிடம் போலீஸ் கேட்ட கேள்வி!
பாலியல் தாக்குதலுக்கு ஆளான பெண்ணிடம் காவல்துறை அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் நொய்டா நகரில் செக்டார் 48 பகுதியில் பெண் ஒருவர் பாலியல் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் தாக்குதலுக்கு ஆளான பெண்: மழையில் வீடியோ எடுப்பதற்காக தனது வீட்டிற்கு வெளியே சென்றபோது, அந்நியர் ஒருவர் தன்னிடம் வந்து தான் போட்டிருந்த ஷார்ட்ஸை கிழித்ததாக அந்த பெண் குற்றஞ்சாட்டியுள்ளார். பெண்ணை தாக்க வரும் போது, இரண்டு பெண்கள் அவரைக் காப்பாற்ற ஓடி வந்துள்ளனர். உடனடியாக அந்த நபர் தப்பி ஓடிவிட்டார்.
செக்டார் 49 காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் அளிக்கச் சென்றுள்ளார். ஆனால், பணியில் இருந்த அதிகாரிகள் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய மறுத்துள்ளனர். அதுமட்டும் இன்றி, அந்த நேரத்தில் மழையில் வெளியே வந்தது ஏன்? என்றும் கேள்வி கேட்டுள்ளனர்.
இப்படிப்பட்ட சூழலில், தனது சொசைட்டியில் உள்ள சிசிடிவி காட்சிகளை நாடி ஆதாரங்களை சேகரிக்க முயன்றார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பல கேமராக்கள் அங்கு செயல்படாமல் இருந்துள்ளது. கவனம் ஈர்க்கும் நோக்கில், தனக்கு நேர்ந்ததையும் காவல்துறை அலட்சியம் குறித்தும் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.
போலீஸ் கேட்ட சர்ச்சை கேள்வி: இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக, அலட்சியமாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நெட்டிசன்கள் கடும் விமர்சனம் முன்வைத்தனர்.
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் இம்மாதிரியான வெறிச் செயல்கள் அரங்கேறி வருகின்றன. இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கு கடந்தாண்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
சமீபத்தில், மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் 20 வயது இளம்பெண் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றத்தில் அவரது காதலனே ஈடுபட்டதாக கூறப்படுகிறது. வெட்டி கொலை செய்தது மட்டும் இன்றி ரயில் நிலையம் அருகே உள்ள புதரில் அந்த உடலை புதைத்தாகவும் கூறப்படுகிறது.
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பெரும்பாலும் அவர்களுக்கு தெரிந்தவர்களாலேயே நடத்தப்படுவதாக அதிர்ச்சி அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்த அறிக்கைக்கு வலுச்சேர்க்கும் விதமாக ஐநா தலைவர் கடந்தாண்டு அதிர்ச்சி தரவை பகிர்ந்திருந்தார்.