மனைவி மீது பரபர குற்றச்சாட்டு.. தற்கொலை செய்த கணவர்.. இதுக்கு ஒரு முடிவே இல்லையா?
மனைவி கொடுமைப்படுத்துவதாகக் கூறி ஆண்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் அப்படிப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு, மனைவி மீது பரபர குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.

தன்னுடைய மனைவி மீதும் அவரது உறவினர்கள் மீதும் கடும் குற்றச்சாட்டுகளை சுமத்திய இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீப காலமாக, மனைவி கொடுமைப்படுத்துவதாகக் கூறி ஆண்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் அப்படிப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு, மனைவி மீது பரபர குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.
கொடுமைப்படுத்தினாரா மனைவி?
கடந்த சில மாதங்களாகவே, மனைவி மீது புகார் கூறிவிட்டு கணவன்மார்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. கடந்தாண்டு, பெங்களூருவை சேர்ந்த ஐடி ஊழியர் அதுல் சுபாஷ் தற்கொலை செய்து கொண்டது தேசிய அளவில் பேசுபொருளானது.
பணத்தை கேட்டு தனது மனைவி தன்னை கொடுமைப்படுத்தியதாக கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுவிட்டு, அதுல் தற்கொலை செய்தார். இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 34 வயது இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். மனைவியும் அவரது குடும்பத்தினரும் டார்ச்சர் செய்ததாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. அவுரையா மாவட்டத்தை சேர்ந்தவர் மோஹித் யாதவ். இவர், ஒரு சிமென்ட் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரும் பிரியா என்பவரும் ஏழு வருடங்கள் காதலித்து வந்தனர். கடந்த 2023ஆம் ஆண்டு, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர், திடீரென்று தற்கொலை செய்து கொண்டார்.
தொடரும் தற்கொலைகள்:
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவர் வெளியிட்ட வீடியோவில், மனைவி மீது பரபர குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். அதில், "இரண்டு மாதங்களுக்கு முன்பு பீகாரில் ஒரு தனியார் பள்ளியில் பிரியாவுக்கு ஆசிரியர் வேலை கிடைத்தது. அப்போது, பிரியா கர்ப்பமாக இருந்தார். ஆனால், அவரது தாயார் அவரை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்தார். எனது மாமியார் எனது எல்லா நகைகளையும் அவருடன் வைத்து கொண்டார்.
திருமணம் செய்துகொண்டபோது நான் வரதட்சணை கேட்கவில்லை. ஆனால், எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எதிராக பொய் வழக்குகளைப் போடுவதாக எனது மனைவி மிரட்டினார்.
என் மனைவி என் வீட்டையும் சொத்தையும் அவள் பெயரில் பதிவு செய்யாவிட்டால், என் குடும்பத்தை வரதட்சணை வழக்கில் சிக்க வைப்பேன் என்று மிரட்டினார். அவருடைய தந்தை மனோஜ் குமார் பொய் புகார் அளித்தார். அவருடைய சகோதரர் என்னைக் கொலை செய்வதாக மிரட்டினார்.
இந்த வீடியோ உங்களுக்குக் கிடைக்கும் போது, நான் இந்த உலகத்தை விட்டுப் போயிடுவேன். ஆண்களுக்கு என்று ஒரு சட்டம் இருந்திருந்தால் நான் இந்த நடவடிக்கையை எடுத்திருக்க மாட்டேன். என் மனைவி மற்றும் அவர் குடும்பத்தினரின் துன்புறுத்தலை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை" என வீடியோவில் பேசியுள்ளார். இந்த வீடியோவை பதிவு செய்து விட்டு மோஹித் யாதவ் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தற்போது விசாரணை நடந்து வருகிறது.

