கழிவறையில் கட்டாயப்படுத்தப்பட்ட தலித் சிறுவன்.. சாதி வெறியில் ஆசிரியர்கள்.. உ.பி.யில் பயங்கரம்!
உத்தர பிரதேசத்தில் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்கள் சிலர், ஆறு வயது தலித் சிறுவனை வற்புறுத்தி கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூகம் முன்னேற்றம் அடைந்ததாக சொல்லி கொண்டாலும், தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், சாதிய கொடூரங்கள் இன்றளவும் தொடர்கிறது. குறிப்பாக, தலித் பெண்கள், சிறுவர்கள், சிறுமிகளுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
சாதி வெறியில் ஆசிரியர்கள் செய்த செயல்: அந்த வகையில், உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. முசாபர்நகர் ஜன்சாத் பகுதியில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆறு வயது தலித் சிறுவன், சில ஆசிரியர்களால் கழிப்பறையை சுத்தம் செய்ய வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
அதுமட்டும் இன்றி, வகுப்பறையில் அந்த சிறுவன் அடைத்து வைக்கப்பட்டதாகவும் காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து, பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர் மீது பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து காவல்துறை தரப்பு பேசுகையில், "முதல்வர் சந்தியா ஜெயின் மற்றும் வகுப்பு ஆசிரியை ரவிதா ராணி ஆகியோரின் அலட்சியத்தால், ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஆறு வயது மாணவன், பள்ளி வகுப்பறையில் பூட்டி கிடந்த சம்பவம் நடந்தது" என்றார்.
வகுப்பறையில் அடைத்துவைக்கப்பட்ட தலித் சிறுவன்: இது தொடர்பாக குழந்தையின் தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், தலித் குழந்தைகள் மீது வெறுப்பு கொண்ட இரண்டு ஆசிரியர்களும் தனது மகனை கழிப்பறையை சுத்தம் செய்ய வற்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் பேசுகையில், "ஆசிரியர்களின் அலட்சியத்தால்தான், பள்ளி மூடப்பட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகும் எனது மகன் வகுப்பறையில் பூட்டப்பட்டிருந்தான். பள்ளி முடிந்து எனது மகன் வீட்டிற்கு வராததால், மற்ற மாணவர்களிடம் அவரைப் பற்றி விசாரித்தேன். ஆனால், தனக்கு தெரியாது என அவர்கள் சொல்லிவிட்டார்கள்.
நான் அங்கு சென்றபோது பள்ளி மூடப்பட்டிருப்பதை கண்டேன். ஆனால், அங்கிருந்து எனது குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது. இதைத் தொடர்ந்து கிராம மக்களும் எனது குடும்பத்தினரும் முதல்வரை அழைத்தோம். பின்னர், ஆசிரியை ரவிதா ராணியின் கணவர் சாவியுடன் பள்ளிக்கு வந்து திறந்து வைத்தார்" என்றார்.
இதுகுறித்து ஆசிரியை ரவிதா ராணியின் கணவர் கூறுகையில், "குழந்தை வகுப்பிலேயே தூங்கியிருக்கலாம்" என்றார். இதுகுறித்து ஆரம்ப பள்ளிக்கல்வி அதிகாரி சந்தீப் குமார் கூறுகையில், "தலைமை ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு, ஆசிரியை ராணி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, மண்டல கல்வி அதிகாரி ஜன்சாத் மற்றும் ஷாபூர் தலைமையிலான இரண்டு பேர் கொண்ட குழு, அதை ஆய்வு செய்து மூன்று நாட்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்கும்" என்றார்.