இன்ஸ்டால்மென்டில் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. பயங்கர ஐடியாவா இருக்கே!
உத்தரப் பிரதேசம் பரேலியில் அரசு அதிகாரி ஒருவர் தவணை முறையில் லஞ்சம் வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் சிறுபான்மை நலத்துறையில் பணிபுரியும் அரசு அதிகாரி ஒருவர், லஞ்சப்பணமான 1 லட்சம் ரூபாயை இன்ஸ்டால்மென்டில் வாங்கியது அம்பலமாகியுள்ளது. அரசு அலுவலகங்களில் லட்சம் வாங்குவது என்பது தொடர் கதையாகி வருகிறது.
அடிமட்ட அரசு அதிகாரிகள் தொடங்கி அமைச்சர்கள் வரை அவர்கள் மீது லஞ்ச குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில், உத்தரப் பிரதேசம் பரேலியில் அரசு அதிகாரி ஒருவர் தவணை முறையில் லஞ்சம் வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.
இன்ஸ்டால்மென்டில் லஞ்சம் கேட்ட அரசு அதிகாரி:
ராஜ்புரா கிராமத்தில் இருந்து வசுந்தரா கிராமத்திற்கு மதரஸாவை இடம் பெயர்ப்பது தொடர்பான ஆவணத்திற்கு ஒப்புதல் வாங்குவதற்கு சிறுபான்மை நலத்துறையில் பணிபுரியும் அரசு அதிகாரி ஒருவர், மஞ்சூரியா அக்தருல் உலூம் நிறுவனத்தைச் சேர்ந்த ஆரிஷிடம் 1 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
ஆறு மாதங்களாக அந்த ஆவணத்திற்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளார் மூத்த வக்ஃப் உதவியாளர் முகமது ஆசிப். இதையடுத்து, பணம் செலுத்த ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், உடனடியாக முழுப் பணத்தையும் செலுத்த இயலவில்லை என பாதிக்கப்பட்டவர் கூறி இருக்கிறார்.
தவணை முறையில் லஞ்சத்தை கொடுக்கும்படி அரசு அதிகாரியான முகமது ஆசிப் கூறியுள்ளார். ஆனால், அவரது ஐடியாவே அவருக்கு வினையாக முடிந்துள்ளது. முதல் தவணையாக 18,000 ரூபாயை வாங்கும்போது, லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கையும் களவுமாக பிடிபட்டார்.
தட்டி தூக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை:
தவணை முறையில் பணம் செலுத்துமாறு ஆசிப் பரிந்துரைத்தபோது, ஆரிஷ் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையைத் தொடங்கியது. பரேலியின் விகாஸ் பவனில் அமைந்துள்ள சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் அதிகாரியை சிக்க வைக்க ஒரு திட்டம் தீட்டப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட ஆசிப், ஆரிஷிடம் இருந்து முதல் தவணை லஞ்சத்தை வாங்கியவுடன், லஞ்ச ஒழிப்புத்துறை அவரை கைது செய்தது. வழக்கு பதியப்பட்டு அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
சமீபத்தில், அதே உத்தரப் பிரதேசத்தில் உள்ள கன்னெளஜ் நகரில் காவல்துறை அதிகாரி ஒருவர் உருளைக்கிழங்கை லஞ்சமாக கேட்ட சம்பவம் வியப்பில் ஆழ்த்தி இருந்தது. ஆனால், விசாரணையில் ஒரு செம்ம ட்விஸ்ட் நடந்துள்ளது.
லஞ்சம் என்ற வார்த்தைக்கு பதில் உருளைக்கிழங்கு என காவல்துறை அதிகாரி பயன்படுத்தி இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, லஞ்சம் கேட்ட உதவி காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.