30 நிறுவனங்கள் நிராகரித்தன; ஏர்போர்ட்டில் க்ளீனர் வேலை: ஐடியில் சாதித்த சிஇஓவின் நம்பிக்கை கதை
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெற தான் கடந்து வந்த கடுமையான பாதைகளைப் பகிர்ந்து நம்பிக்கையை விதைத்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெற, தான் கடந்து வந்த கடுமையான பாதைகளைப் பகிர்ந்து நம்பிக்கையை விதைத்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆமீர் குதுப். இவருக்கு தற்போது 33 வயதாகிறது. தற்போது இவர் 2 மில்லியன் டாலர் பெருமான ஐடி நிறுவனத்தின் சிஇஓவாக உள்ளார்.
ஆனால் வாழ்க்கை அவருக்கு அவ்வளவு எளிதானதாக இருந்திருக்கவில்லை. சாத்திய கதவுகள், சறுக்கிய பாதைகள், ஏசிய வாய்கள் என எல்லாவற்றையும் கடந்து தான் அவர் இந்த வெற்றியை சந்தித்திருக்கிறார்.
இது குறித்து ஆமீர் குதுப் அளித்த பேட்டி வருமாறு:
குதுப் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள டீக்கின் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பாடம் படிக்க சேர்ந்தார். மற்ற செலவுகளுக்கு படிக்கும்போதே வேலை செய்யலாம் என அவர் நினைத்தார். ஆனால் அவருக்கு அந்த வாய்ப்பு எளிதாக கிடைக்கவில்லை. 300 இடங்களில் வேலைக்கு விண்ணப்பித்தார். எதுவும் பலன் தரவில்லை. நிறைய நிராகரிப்புகளுக்குப் பின்னர் அவ்லான் விமான நிலையத்தில் தூய்மைப் பணியை ஏற்றார்.
அது பற்றி அவர் கூறுகையில், “எனக்கு ஆரம்பத்தில் ரொம்பவே பயமாக இருந்தது. ஏனென்றால் என் ஆங்கிலம் மிகவும் மோசமாக இருந்தது. அதனால் எனக்கு வேலை கிடைப்பதும் கஷ்டமாக இருந்தது. எல்லா வேலைக்கும் முன் அனுபவம் கேட்டார்கள். ஆனால் நான் கல்லூரி இறுதி ஆண்டில் படித்தபோது எனக்கு ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் கிடைத்தது.
அதுதான் என் வாழ்க்கையின் திருப்புமுனை. அங்கே நான் சேர்ந்த 15வது நாளிலேயே எனக்கு ஆப்பரேஷன்ஸ் மேனேஜர் பணி கிடைத்தது. இரண்டாண்டுகளுக்குப் பின்னர் நான் இடைக்கால பொது மேலாளர் ஆனேன். பின்னர் அதே பணி எனக்கு நிரந்தரமாக்கப்பட்டது. எனது நிறுவனத்தின் வருவாயைப் பெருக்க என் பணி உதவியது. அதனால் நிறுவனமும் என் மீது நல் எண்ணம் கொண்டது. ஒரு கட்டத்தில் நான் ஏன் தனியாக ஒரு ஐடி நிறுவனம் தொடங்கக் கூடாது என்று எண்ணினேன். ஒரு நாள் ரயிலில் ஒரு தொழிலதிபரை சந்தித்தேன். அவருடன் பேசிக் கொண்டிருந்தது எனக்கு உத்வேகம் தந்தது. அதனால் 2014ல் நான் என்டர்ப்ரைஸ் மங்கி என்ற நிறுவனத்தில் இணைந்தேன். அப்போது எனது முதலீடு வெறும் 2000 டாலர் தான். நான் பிசினஸ் நடவடிக்கைகள் பலவற்றை ஆட்டோமேட் செய்தேன்.
இதனால் எனக்கு நேரமும் பணமும் மிச்சமானது. இதனால் எனது நிறுவனமும் மேலும் மேலும் வளர்ந்தது. இன்று எனது நிறுவனம் 4 நாடுகளில் 100 பணியாளர்களுடன் செயல்படுகிறது. இந்தியாவிலும் என்டர்ப்ரைஸ் மங்கி இயங்குகிறது. இன்று என் என்டர்ப்ரைஸ் மங்கி நிறுவனத்தின் டர்ன் ஓவர் 2 மில்லியன் டாலர் என்றளவில் உள்ளது. எனக்கு விருதுகளும், கவுரவங்களும் குவிந்து வருகின்றன.
இதற்கு எல்லாம் காரணம் விடா முயற்சி. தோல்விகளைக் கண்டு நான் ஓடி ஒளியவில்லை. வந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டேன். எதைச் செய்தாலும் அதில் முழு ஈடுபாட்டுடன் ஸ்மார்ட்டாக செயல்பட்டேன். இது தான் என் வெற்றியின் ரகசியம்” என்று கூறினார்.