"மக்களின் நம்பிக்கையோடு விளையாடுறாங்க" கும்பமேளா குறித்து சர்ச்சை.. மம்தாவை பொளந்து கட்டிய யோகி!
அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, 56 கோடி மக்களின் நம்பிக்கையில் விளையாடுவதாக யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார்.

மகா கும்பமேளாவை மரண கும்பமேளா என விமர்சித்த மேற்குவங்க முதலமைச்சர் மம்தாவுக்கு எதிராக உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கொந்தளித்துள்ளார். மகா கும்பமேளா தொடங்கியதில் இருந்து 56 கோடி பேர் புனித நீராடியுள்ளதாகவும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர்களின் நம்பிக்கையில் விளையாடுவதாக யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார்.
மம்தாவின் சர்ச்சை கருத்து:
ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா, உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மகா கும்பமேளாவில் முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை, வசதிகள் ஏற்படுத்தி தரப்படவில்லை என மத்திய, மாநில பாஜக அரசு மீது தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
குறிப்பாக, கும்பமேளாவிற்காக விடப்பட்ட சிறப்பு ரயிலில் ஏறுவதற்காக மக்கள் காத்திருந்தபோது டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இதை மேற்கோள் காட்டி, மகா கும்பமேளாவை மரண கும்பமேளாவாக மாறிவிட்டதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்திருந்தார்.
யோகி ஆதித்யநாத் கொடுத்த பதிலடி:
மம்தாவின் இந்த கருத்துக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில், மம்தாவுக்கு பதிலடி கொடுத்த யோகி ஆதித்யநாத், "கும்பமேளா தொடங்கியதிலிருந்து 56 கோடிக்கும் அதிகமான மக்கள் புனித நீராடியுள்ளனர்.
அவர் (மம்தா) அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுகிறார். அவை இந்த 56 கோடி மக்களின் நம்பிக்கையுடன் விளையாடுவது போன்றது" என்றும் குற்றம் சாட்டினர்.
கடந்த ஜனவரி 29 ஆம் தேதி கூட்ட நெரிசலில் உயிரிழந்த 30 பேரின் குடும்பத்தினருக்கும், பிரயாக்ராஜுக்கு மகா கும்பமேளாவிற்காக சென்றபோது சாலை விபத்துகளில் உயிரிழந்த மற்றவர்களுக்கும் யோகி ஆதித்யநாத் தனது இரங்கலைத் தெரிவித்தார். "அரசாங்கம் அவர்களுடன் துணை நிற்கிறது. நாங்கள் அவர்களுக்கு எல்லா வழிகளிலும் உதவுவோம்.
ஆனால், இதை அரசியலாக்குவது எப்படி சரியாக இருக்கும். அதிர்ஷ்டத்தால்தான் இந்த நூற்றாண்டின் மகா கும்பமேளாவில் பங்கேற்க மாநில பாஜக அரசுக்கு வாய்ப்பு கிடைத்தது. அனைத்து பொய் பிரச்சாரங்களையும் புறக்கணித்து, நாடும் ஒட்டுமொத்த உலகமும் மகா கும்பமேளாவில் பங்கேற்றுள்ளன" என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: IND Vs BAN CT 2025: நாகினி பாய்ஸை வீழ்த்துமா ரோகித் படை? இந்தியாவின் பலம், வங்கதேசத்தின் பலவீனம் - துபாய் மைதானம் எப்படி?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

