ஆட்டோ ஓட்டுநர் மனைவியானார் பெல்ஜிய பெண்...கடல் கடந்த காதல், கர்நாடகாவில் சேர்ந்த கதை...
கர்நாடக மாநிலம் ஹம்பிக்கு சுற்றுலா வந்த பெல்ஜியத்தை சேர்ந்த பெண், ஆட்டோ ஓட்டுநரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் ஹம்பிக்கு சுற்றுலா வந்த பெல்ஜியத்தை சேர்ந்த பெண், ஆட்டோ ஓட்டுநரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
யார் எப்போது, எங்கே, யாரை காதலிப்பார்கள் என்று யாருக்கு தெரியாது. அப்படி ஒரு கடல் கடந்த கதைதான் கர்நாடகாவில் தற்போது நடந்துள்ளது. கர்நாடகாவை சேர்ந்த சுற்றுலா வழிகாட்டியான 30 வயதான ஆனந்த் ராஜூ என்பவரும், பெல்ஜியத்தை சேர்ந்த 27 வயதான காமில் என்ற பெண்ணும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து தற்போது திருமணம் செய்துள்ளனர். இந்த திருமணமும் இந்து முறைப்படி நடைபெற்றுள்ளது.
வளர்ந்த காதல்:
கர்நாடகாவில் ஆட்டோ ஓட்டுநர் ஆனந்த் ராஜ் இருந்து வருகிறார். இவர் வெளிநாட்டு பயணிகளுக்கு சுற்றுலா வழிகாட்டியாகவும் இருந்துள்ளார். இந்தநிலையில், கொரோனா தொற்றுக்கு முன் காமில் என்ற பெண் தனது குடும்பத்துடன் இந்தியாவிற்கு வந்துள்ளார். அப்போது சுற்றுலா வழிகாட்டியான ஆனந்த் ராஜ் அவர்களுக்கு உதவி செய்துள்ளார்.
அப்போது ஆனந்த் ராஜ் மற்றும் கெமிலுக்கு இடையே நட்புரீதியான பழக்கம் ஏற்பட்டுள்ளது. ராஜு காமிலை அழைத்துக்கொண்டு ஊரை சுற்றி வந்து வரலாறு கதைகளை சொல்லியுள்ளார். தொடர்ந்து, நல்ல ஹோட்டலில் தங்குவதற்கும் ஏற்பாடு செய்துள்ளார். இந்த பயணம் முடிந்த சில நாட்களுக்குப் பிறகு, காமில் தனது குடும்பத்துடன் பெல்ஜியம் திரும்பினார்.
ராஜுவும், காமிலியும் பிரிந்த நிலையில் சமூக இணையதளங்கள் வாயிலாக மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களின் நட்பு படிப்படியாக வளர்ந்து பின்னர் நட்பு காதலாக மாறியது. இருவரும் தங்கள் முழு வாழ்க்கையையும் ஒன்றாக செலவிட முடிவு செய்து, தங்கள் குடும்பத்தினரிடம் இதுகுறித்து கூறியுள்ளனர். இவர்களது காதலுக்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்து திருமணத்திற்கு தயாராகினர்.
கொரோனா தொற்றுநோய் காரணமாக விதிக்கப்பட்ட லாக்டவுன் காரணமாக பெல்ஜியத்தில் இருந்து காமில் இந்தியாவுக்கு வர முடியவில்லை. தடை நீக்கப்பட்ட பிறகு, பெல்ஜியத்தில் இருந்து ஆனந்த் ராஜூக்காக காமில் இந்தியா வந்தார். இருவரும் கடந்த நவம்பர் 25ஆம் தேதி ஹம்பியில் உள்ள விருபாக்ஷா கோவிலில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
கண்டதும் காதல்:
காமில் கூறுகையில், ”சுற்றுப்பயணத்தின் போது ராஜு தன்னையும் அவரது குடும்பத்தினரையும் நன்றாக வழிநடத்தினார். அவர் எனக்கு மிகவும் நேர்மையாகவும் அன்பாகவும் தோன்றினார். முதல் பார்வையில் நான் அவரை காதலித்தேன். என் நாட்டிற்குத் திரும்பிய பிறகு ராஜூவை கொரோனா காரணமாக மீண்டும் சந்திப்போமா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இன்று நாங்கள் ஒன்றாக இணைந்து கணவன் மனைவியாக மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.” என்றார்.
காமிலை தொடர்ந்து பேசிய ஆனந்த் ராஜூ, ”கடந்த 2019ம் ஆண்டு காமில் தனது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களுடன் ஹம்பிக்கு வந்திருந்தார். அவர்கள் தங்குவதற்கும், பயணத்துக்கும் முழு ஏற்பாடுகளைச் செய்திருந்தேன். அவர்கள் எனது கவனிப்பால் மகிழ்ச்சியடைந்தனர். காமில் என்னை பார்ப்பதற்காக மீண்டும் ஹம்பிக்கு வருவதாக உறுதியளித்தார். கொடுத்த வாக்கை தற்போது காமில் காப்பாற்றினார். சில நாட்களில் நாங்கள் ஒருவரையொருவர் காதலித்தோம். இப்போது காமிலி என் மனைவி" என்றார்.
காதலுக்கு எல்லையே இல்லை என்பதை இவர்களது திருமணம் மீண்டும் நிரூபித்துள்ளது.