அமைச்சராக பட்டியலினத்தவர் இருப்பதை தி.மு.க.வால் சகிக்க முடியவில்லை - கொந்தளித்த எல். முருகன்!
மத்திய அமைச்சர் எல். முருகனை தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் டி. ஆர். பாலு அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில், வெள்ள பாதிப்புக்கு உள்ளான தமிழ்நாட்டுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதி வழங்க வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?
அப்போது பேசிய தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு, தமிழ்நாட்டிற்கான வெள்ள நிவாரண நிதியை வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக குற்றம் சாட்டினார். உடனே, மத்திய இணையமைச்சர் எல். முருகன் குறுக்கிட்டு பேசினார். இதனால் ஆவேசமடைந்த டி.ஆர். பாலு, "எம்.பி., ஆக இருக்கவே எல். முருகன் தகுதியற்றவர். அவருக்கு ஒழுக்கமாக இருப்பது எப்படி என கற்றுக் கொடுங்கள்" என ஆவேசமாக பேசினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை எப்படி தகுதியற்றவர் என கூறலாம் என, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்ளிட்ட பாஜக உறுப்பினர்கள் டி.ஆர். பாலுவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், திமுக உறுப்பினர்களும் எழுந்து நின்று பாஜக உறுப்பினர்களுக்கு எதிராக ஆவேசமாக பேச தொடங்கினர். இதனால், திமுக மற்றும் பாஜக உறுப்பினர்கள் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தால், மக்களவையில் சிறிது நேரம் அமளி ஏற்பட்டது. தொடர்ந்து, தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி ஒதுக்காததை கண்டித்து, திமுக எம்.பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
மத்திய அமைச்சர் எல். முருகனை திமுக அவமதித்ததா?
மக்களவையில் என்ன நடந்தது என்பது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு விளக்கம் அளித்த மத்திய இணையமைச்சர் எல். முருகன், "பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் அமைச்சராக இருப்பதை திமுகவால் சகித்து கொள்ள முடியவில்லை. இதனால்தான், என்னையும் எனது சமூகத்தையும் அவமானப்படுத்த இழிவான, நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார்" என்றார்.
இதற்கு எதிர்வினையாற்றி திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ .ராசா, "தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் ஏதேனும் தொகை வெளியிடப்படுமா என்று மத்திய உள்துறை இணை அமைச்சரிடம் கேள்வி எழுப்பினேன். மத்திய இணை அமைச்சர் பதில் அளிக்காமல் பொறுப்பற்று பேசினார். எங்களுக்கு கொஞ்சம் கோபம் வந்துவிட்டது.
இந்த விவாதத்தின் போது, டி.ஆர்.பாலு சில கேள்விகளைக் கேட்க விரும்பினார். அவரை பேச விடாமல், மற்றொரு மத்திய இணை அமைச்சரும் பாஜக தலைவருமான எல். முருகன் தடுத்தார். எனவே, நீங்கள் (எல் முருகன்) தமிழ்நாட்டிலிருந்து உறுப்பினராக இருக்க தகுதியற்றவர். ஏனெனில் நீங்கள் மாநில நலனுக்கு எதிரானவர் என தெரிவித்தோம்" என்றார்.