சிறையில் சாதிய கொடுமையா? பாகுபாட்டுடன் நடத்தப்படும் கைதிகள்? அதிரடி காட்டிய மத்திய அரசு!
சாதிய ரீதியாகவும் மத ரீதியாகவும் சிறையில் உள்ள கைதிகள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
சாதிய ரீதியாகவும் மத ரீதியாகவும் சிறையில் உள்ள கைதிகள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த நிலையில், அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளின் தலைமை செயலாளர்களுக்கு, இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
சிறையில் சாதிய கொடுமையா?
சாதிய, மத ரீதியாக சிறைக் கைதிகள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதும் அதன் அடிப்படையில் அவர்களுக்கு சிறை பணி ஒதுக்கப்படுவதும் அரசியலமைப்புக்கு எதிரானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாகுபாடு காட்டும் வகையில் சிறை விதிகள் வகுக்கக்கூடாது என்பதை சிறை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் போன்ற அறிவுறுத்தல்கள் அடங்கிய மாதிரி சிறை கையேடு, 2016ஐ மத்திய உள்துறை அமைச்சகம் தயாரித்து அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு அனுப்பியது. சமையலறையை நிர்வகிப்பதில் சாதிய, மத ரீதியாக பாகுபாடு காட்டக்கூடாது என அதில் தெரிவிக்கபட்டது. அதுமட்டும் இன்றி, சாதிய, மத ரீதியாக உணவு சமைக்கக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.
மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்:
இந்த விதிகளை மேற்கோள் காட்டி மத்திய உள்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில், "குறிப்பிட்ட சாதி அல்லது மதத்தைச் சேர்ந்த கைதிகளுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக-பொருளாதார நிலை, சாதி அல்லது வர்க்கத்தின் அடிப்படையில் கைதிகளை பிரித்து பார்க்க அனுமதிக்கக் கூடாது.
அத்தகைய விதி ஏதேனும் இருந்தால், கையேடு/விதிகளில் இருந்து பாரபட்சமான விதியை திருத்த/நீக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சிறைச்சாலைகளில் சாதிய அடிப்படையில் வேலைகளை வழக்கக் கூடாது என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சிறைக் கைதிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை கவலை அளிக்கிறது.
கைதிகளின் உடல் மற்றும் மன நலனுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதை உறுதி செய்ய அவ்வப்போது ஆலோசனைகளை அனுப்பி வருகிறோம். மாதிரி சிறை கையேடு, 2016 விதிகளின்படி, கைதிகளுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை நடத்தப்பட வேண்டும்.
மருத்துவ பரிசோதனையை தவிர்த்து பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் (STDs), ஹெபடைடிஸ்-க்கும் பரிசோதனை நடத்தப்பட வேண்டும். பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பாஜக மீண்டு ஆட்சி அமைத்தால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2000 ரூபாயாக உயரும்.. மம்தா பானர்ஜி பகீர்!