EXCLUSIVE: பொது சிவில் சட்டம் பாஜகவின் சிந்தாந்தம்; காங்கிரஸ், ஆம் ஆத்மி பொருட்டல்ல: ஏபிபி-க்கு அமித் ஷா சிறப்புப் பேட்டி
பொது சிவில் சட்டம் தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவை சட்டத்துறை நிலைக் குழு, பொது மக்களிடம் கருத்து கேட்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழக அரசும் குழு அமைத்துள்ளது.
பொது சிவில் சட்டம் தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவை சட்டத்துறை நிலைக் குழு, பொது மக்களிடம் கருத்து கேட்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழக அரசும் குழு அமைத்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வர மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், ஏபிபி நியூஸ் தளத்திற்கு குஜராத் சட்டப்பேரவைத் தேரதலையொட்டி உள்துறை அமைச்சர் அமித் ஷா சிறப்பு நேர்காணல் அளித்தார்.
அப்போது அவர் நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம் குறித்து பேசினார். அவர் கூறியதாவது:
பொது சிவில் சட்டத்தைப் பொறுத்தவரை அது பாஜகவின் நீண்ட கால சித்தாந்தம் ஆகும். பொது சிவில் சட்டத்தை கொண்டுவர சித்தாந்த ரீதியில் நாட்டு மக்களுக்காக பாஜக உறுதி பூண்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வர மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. உத்தரகாண்ட், இமாசலப் பிரதேசம் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களைத் தொடர்ந்து, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த குஜராத் குழு அமைத்துள்ளது.
பாரதிய ஜன சங்கம் இருந்த சமயத்தில் இருந்து தேர்தல் வாக்குறுதியில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பாரதிய ஜன சங்கம் இருந்தபோது ஆம் ஆத்மி கிடையாது. காங்கிரஸ் இப்போது ஒன்றுமே இல்லாத கட்சியாகி விட்டது. இதனால், பொது சிவில் சட்டம் குறித்து இந்தக் கட்சிகள் தெரிவிக்கும் கருத்துக்களை ஏற்க முடியாது.
அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் 44வது பிரிவின் கீழ், நாடாளுமன்றம் முழு நாட்டிலும் மதத்தின் அடிப்படையில் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
ஒவ்வொரு நபரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதையும், மதத்தின் அடிப்படையில் யாருக்கும் எந்த சிறப்பு மரியாதையும் அல்லது அநீதியும் ஏற்படக் கூடாது என்பதையும் பிரிவு 14 மற்றும் பிரிவு 15 தெளிவுப்படுத்துகிறது என்றார் அமித் ஷா.
இதனிடையே, வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து, தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வருகை தரவுள்ளார்.
அமித்ஷாவின் வருகையானது, பிரதமர் மோடி வருகையின் அடுத்த நாளுக்கு வரவுள்ளதால் அரசியலில் சூட்டை கிளப்பியுள்ளது.
பிரதமர் வருகை:
மத்திய அரசு ரயில்வே துறையில் நவீனத்தையும், வேகத்தையும் இணைக்கும் விதத்தில் வந்தே பாரத் ரயில் உருவாக்கப்பட்டது. இந்த ரயிலானது மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் என திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. நாட்டின் 75 முக்கிய நகரங்களில் இந்த வந்தே பாரத் ரயிலை இயக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்தியாவில் நான்கு வந்தே பாரத் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
இந்த 4 ரயில்களும் வட மாநிலங்களில் மட்டுமே இயங்கி வந்தநிலையில், தென்னிந்தியாவில் இதுவரை வந்தே பாரத் ரயில் இயக்கப்படவில்லை என்ற குறை இருந்து வந்தது. தற்போது இந்த குறையை போக்கும்விதமாக சென்னை - மைசூர் இடையிலான வந்தேபாரத் ரயில் சேவையை வருகிற 11ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருப்பதாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வருகை:
இதையடுத்து, திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தின் 36வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். விழாவில் கலந்துகொள்ளும் மோடி, மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களையும் வழங்கி சிறப்புரையாற்ற இருக்கிறார்.
அமித்ஷா வருகை:
இந்நிலையில், அடுத்த நாளான நவம்பர் 12 ஆம் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வருகை தரவுள்ளார். அப்போது, வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் குறித்து, உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில், ஏற்கனவே 10 தொகுதிகளை தேர்வு செய்து பாஜக தேர்தல் வியூகம் வகுத்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், அமித்ஷா வருகையானது தமிழ்நாட்டில் அரசியல் சூட்டை கிளப்பியுள்ளது.