இந்திரா காந்திக்கு பிறகு 2ஆவது பெண்மணி.. நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்கள்.. லிஸ்ட் இதோ!
இந்திரா காந்திக்குப் பிறகு, 2019ஆம் ஆண்டில், பட்ஜெட்டை தாக்கல் செய்த இரண்டாவது பெண்மணி என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் படைத்தார். இதுவரை 6 பட்ஜெட்களை தாக்கல் செய்துள்ளார்.
பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக உள்ள நிர்மலா சீதாராமன், கட்சியிலும் ஆட்சியிலும் பல்வேறு முக்கிய பொறுப்புகளை விகித்துள்ளார். 2014ஆம் ஆண்டு, பாஜக ஆட்சி அமைத்த பிறகு, மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் அவருக்கு வழங்கப்பட்டது.
பின்னர், மனோகர் பாரிக்கர், அருண் ஜெட்லியை தொடர்ந்து, முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் நிர்மலா சீதாராமன் வசம் வந்தது.
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப்போகும் 7ஆவது பட்ஜெட்:
இதை தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு, பாஜக இரண்டாவது முறையாக வெற்றிபெற்று ஆட்சி அமைத்த பிறகு, நிதித்துறை அமைச்சகம் நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டது. அப்போதில் இருந்து இப்போது வரை, அவரே மத்திய நிதித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார்.
நாளை மறுநாள், தனது ஏழாவது பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்ய உள்ளார். இந்த சூழ்நிலையில், அவர் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கைகளின் முக்கியத்துவம் பற்றி கீழே காண்போம்.
கடந்த 2020ஆம் ஆண்டு, பிப்ரவரி 1ஆம் தேதி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2020-21 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கிட்டத்தட்ட 2 மணி நேரம் 42 நிமிடங்கள் பட்ஜெட் உரையை அவர் வாசித்தார். இதுவே, நீண்ட நேரம் ஆற்றப்பட்ட பட்ஜெட் உரையாகும்.
இந்திரா காந்திக்கு பிறகு இரண்டாவது பெண்மணி:
பட்ஜெட் உரையில் இரண்டு பக்கங்கள் மீதம் இருந்தபோதிலும், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பட்ஜெட் உரையை குறைக்க வேண்டியதாயிற்று.
முன்னதாக, 2019ஆம் ஆண்டு, ஜூலை மாதம், மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் ஆற்றிய முதல் பட்ஜெட் உரைதான் நீண்ட நேரம் ஆற்றப்பட்ட உரையாக இருந்தது. தன்னுடைய சாதனையை அவரே முறியடித்தது குறிப்பிடத்தக்கது.
1970-71 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த இந்திரா காந்திக்குப் பிறகு, 2019ஆம் ஆண்டில், பட்ஜெட்டை தாக்கல் செய்த இரண்டாவது பெண்மணி என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் படைத்தார்.
2019ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, மத்திய பட்ஜெட் அறிக்கை பாரம்பரிய பிரீஃப்கேஸில்தான் கொண்டு வரப்பட்டது. ஆனால், 2019ஆம் ஆண்டு முதல், நிர்மலா சீதாராமன் மத்திய நிதி அமைச்சராக ஆன பிறகு, சிவப்பு நிறத்தினாலான தேசிய சின்னம் பொறிக்கப்பட்ட பையில் பட்ஜெட் அறிக்கை கொண்டு வரப்படுகிறது.
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, 2021-22 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை முதல்முறையாக காகிதம் இல்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது. 2021ஆம் ஆண்டு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையை நூற்றாண்டுக்கு ஒரு முறை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என நிர்மலா சீதாராமன் புகழாரம் சூட்டினார்.
தனியார்மயமாக்கல் மற்றும் வரி வசூலில் அதிக கவனம் செலுத்தும் அதே சமயத்தில், உள்கட்டமைப்பு மற்றும் சுகாதாரத்துறையின் மூலம் ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரமான இந்தியாவை மீட்டெடுக்க அந்த பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டது.