Gujarat Riot Case : குஜராத் கலவர வழக்கு: செயற்பாட்டாளர் டீஸ்டாவுக்கு ஆதரவாக களமிறங்கிய உலக கல்வியாளர்கள்
வழக்கின் தீர்ப்பு ஏற்படுத்தக்கூடிய மோசமான விளைவு குறித்து நீதிமன்றம் தானாக முன்வந்து கருத்தில் கொண்டு, தீர்ப்பில் கூறப்பட்டுள்ள இழிவான கருத்துக்களை அகற்ற கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
உலகம் முழுவதிலுமிருந்து 11 மதிக்கத்தக்க கல்வியாளர்கள் மற்றும் அறிஞர்கள், ஆகஸ்ட் 19, வெள்ளியன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
Academics urge SC to dismiss case against Teesta Setalvad https://t.co/ij6Gr6wZtz
— Xavier Dias (@reachxdias) August 20, 2022
ஜாகியா ஜாஃப்ரி வழக்கில் மனுதாரர்களான ஆர்வலரும் பத்திரிகையாளருமான டீஸ்டா செடல்வாட் மற்றும் முன்னாள் குஜராத் காவல்துறைத் தலைவர் ஆர்.பி. ஸ்ரீகுமார் ஆகியோரின் நோக்கங்களுக்கு நியாயமற்ற மற்றும் முற்றிலும் தேவையில்லாத உள்நோக்கத்தை உச்ச நீதிமன்றம் கற்பித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வழக்கின் தீர்ப்பு ஏற்படுத்தக்கூடிய மோசமான விளைவு குறித்து நீதிமன்றம் தானாக முன்வந்து கருத்தில் கொண்டு, தீர்ப்பில் கூறப்பட்டுள்ள இழிவான கருத்துக்களை அகற்றவும் மற்றும் இந்த கருத்துகளின் அடிப்படையில் மனுதாரர்கள் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நோம் சாம்ஸ்கி, பிகு பரேக், அர்ஜுன் அப்பாதுரை, வெண்டி பிரவுன், ஷெல்டன் பொல்லாக், கரோல் ரோவன், சார்லஸ் டெய்லர், மார்த்தா நஸ்பாம், ராபர்ட் பாலின், அகீல் பில்கிராமி, ஜெரால்ட் எப்ஸ்டீன் ஆகியோர் அறிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர்.
வழக்கு குறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், "பொறுமையோடு, நீண்ட காலமாக, அமைதியான, நியாயமான முறையில் நீதியைப் பெற சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவது பிரச்னையை தூண்டும் செயல் என அழைத்தால், இந்தக் கருத்து, புண்படுத்தும் வகையில் இருப்பதைத் தவிர, அதிகார வரக்கத்தில் அதிகபடியாக குவிந்திருக்கும் அதிகாரம் தொடர்பான விவகாரங்களில் நீதிமன்றத்தை அணுகுவதன் நம்பிக்கையை குலைக்கும் செயல் ஆகும்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
குஜராத்தில் 2002 கலவரம் தொடர்பான ஆதாரங்களை ஜோடித்ததாகக் கூறப்படும் வழக்கில் டீஸ்டா செடல்வாட் மற்றும் ஆர்.பி. ஸ்ரீகுமார் ஆகியோருக்கு ஜூலை 30 சனிக்கிழமையன்று அகமதாபாத்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் ஜாமீன் மறுத்துள்ளது.
ஜாகியா ஜாஃப்ரி மற்றும் செடல்வாட் ஆகியோர் சிறப்பு விசாரணை குழுவின் அறிக்கையை எதிர்த்து சுதந்திரமான விசாரணையை நாடியுள்ளனர். அதே சிறப்பு விசாரணை குழுவின் அறிக்கையின் அடிப்படையில் மனுவை தள்ளுபடி செய்வது உச்ச நீதிமன்றத்தின் தரப்பில் அநீதியானது என்று கல்வியாளர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
வழக்கு குறித்து விரிவாக விவரித்துள்ள கல்வியாளர்கள், "கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் குஜராத் அரசின் மீது எந்த குற்றமும் இல்லை என சிறப்பு விசாரணை குழு அறிக்கை அளித்திருப்பதற்கு எதிராக டீஸ்டா செடல்வாட் மற்றும் ஆர்.பி. ஸ்ரீகுமார், உச்ச நீதிமன்றத்தை சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டனர்.
குறைபாடுகள் இருப்பதாக கூறப்பட்டுள்ள அதே சிறப்பு விசாரணை குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அவர்களின் மேல்முறையீட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்வது நியாயமற்றது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.