"இந்திய இறையாண்மையை சீர்குலைக்க சதி" கைதான பத்திரிகையாளர்களுக்கு எதிராக காவல்துறை பரபர குற்றச்சாட்டு
செய்தி நிறுவனத்தின் அலுவலகத்தில் சோதனை நடத்தி, பத்திரிகையாளரை கைது செய்ததற்கு பத்திரிகையாளர் சங்கங்கள் தொடங்கி எதிர்க்கட்சிகள் வரை கண்டனம் தெரிவித்துள்ளன.
நியூஸ்கிளிக் இணைய செய்தி நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் அதற்கு தொடர்புடைய பத்திரிகையாளர்கள் வீட்டில் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு நேற்று முன்தினம் சோதனை நடத்தியது. இதை தொடர்ந்து, அதன் தலைமை செய்தி ஆசிரியரும் நிறுவனருமான பிரபீர் புர்கயஸ்தா, நிறுவனத்தின் மனித வள பிரிவு தலைவர் அமித் சக்ரவர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சீன அரசாங்கத்திடம் நிதி பெற்றதா நியூஸ்கிளிக் செய்தி நிறுவனம்?
செய்தி நிறுவனத்தின் அலுவலகத்தில் சோதனை நடத்தி, பத்திரிகையாளரை கைது செய்ததற்கு பத்திரிகையாளர் சங்கங்கள் தொடங்கி எதிர்க்கட்சிகள் வரை கண்டனம் தெரிவித்துள்ளன.
நாட்டின் இறையாண்மையையும் ஒற்றுமையையும் சீர்குலைக்கும் நோக்கில் செயல்படுபவர்களுக்கு எதிராகவே உபா (சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டம்) சட்டம் பதிவு செய்யப்படும். ஆனால், பத்திரிகையாளருக்கு எதிராக உபா சட்டம் பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
இந்த நிலையில், நியூஸ்கிளிக் நிறுவனத்திற்கு எதிரான நடவடிக்கை குறித்து டெல்லி காவல்துறை நீதிமன்றத்தில் பரபர அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் பல அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்திய இறையாண்மையை சீர்குலைக்க சதியா?
இந்திய இறையாண்மையையும் ஒற்றுமையையும் சீர்குலைக்கும் நோக்கில் வெளிநாட்டு இருந்து இந்தியாவுக்கு கோடி கணக்கில் இந்திய நிறுவனங்களாலும் வெளிநாட்டு நிறுவனங்களாலும் பணம் கொண்டு வரப்பட்டதாக ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் உபா சட்டம் பதிவு செய்யப்பட்டதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு நிதி பெற்றது தொடர்பான விவகாரத்தில் நியூஸ்கிளிக் நிறுவனத்திடம் கடந்த 2021ஆம் ஆண்டு முதலே அமலாக்கத்துறை விசாரணை செய்து வருகிறது. தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள பயங்கரவாத வழக்கை டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு விசாரித்து வருகிறது.
நேற்று முன்தினம்தான், நியூஸ்கிளிக் செய்தி நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, தங்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
"சீனாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை"
"நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொரு சீன நிறுவனத்திற்கு ஆதரவாகவோ சீன அரசாங்கத்திற்கு ஆதரவாகவோ எந்த செய்தியையும் அல்லது தகவலையும் வெளியிடவில்லை. எங்கள் இணையதளத்தில் சீனாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை. அனைத்து நிதியுதவிகளும் உரிய வங்கி மூலம் பெறப்பட்டு, ஆர்பிஐ விதியின் படி தகுந்த அரசு நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்டது.
நியூஸ்கிளிக் இணையதளத்தில் இதுவரை வெளியிடப்பட்ட அனைத்து செய்திகளும் இணையத்தில் கிடைக்கின்றன. எவரும் படிக்க முடியும். சீனாவுத்து ஆதரவாக நாங்கள் வெளிட்டதாக ஒரு கட்டுரையையோ வீடியோவையோ கூட டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு குறிப்பிடவில்லை" என விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 2018 முதல் 2021ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், 77 கோடி ரூபாயை வெளிநாட்டு நிதியாக பெற்றதாகவும் பணமோசடி செய்ததாகவும் நியூஸ்கிளிக் மீது அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.