டிவி, ஃப்ரிட்ஜ், ஸ்மார்ட் போன் விலை குறைகிறது.. இந்தியர்களுக்கு ஜாக்பாட்.. ரெடியா இருங்க!
எலக்ட்ரானிக் பாகங்களை தயாரிக்கும் சீன நிறுவனங்கள், மின்னணு பாகங்களை தள்ளுபடி விலையில் இந்திய நிறுவனங்களுக்கு தர முன்வந்துள்ளது. எனவே, இந்தியாவில் டிவி, ஃப்ரிட்ஜ், ஸ்மார்ட் போன்கள் ஆகியவற்றின் விலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரி மேல் வரி போட்டு அமெரிக்கா வர்த்தக போரில் ஈடுபட்டு வரும் நிலையில், அதன் விளைவாக இந்திய நிறுவனங்களுக்கு ஜாக்பாட் கிடைத்துள்ளது. சீன பொருள்களின் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 125 சதவிகிதம் வரை வரி வதித்துள்ள நிலையில், எலக்ட்ரானிக் பாகங்களை தயாரிக்கும் சீன நிறுவனங்கள், மின்னணு பாகங்களை தள்ளுபடி விலையில் இந்திய நிறுவனங்களுக்கு தர முன்வந்துள்ளது. எனவே, இந்தியாவில் டிவி, ஃப்ரிட்ஜ், ஸ்மார்ட் போன்கள் ஆகியவற்றின் விலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க சீன வர்த்தக போர்:
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து அதிரடி நடவக்கைகளை எடுத்து வருகிறார். பரஸ்பர வரி என்ற பெயரில், தன்னுடன் வர்த்தகம் மேற்கொண்டு வரும் நாடுகளுக்கு வரி வதித்து வருகிறார். இதற்கு எதிர்வினையாற்றும் வகையில், அமெரிக்க பொருள்கள் மீது சீனாவும் பதில் வரி போட்டுள்ளது.
திடீரென, சீனாவை தவிர மற்ற நாடுகள் மீது விதிக்கப்பட்ட பரஸ்பர வரியை 90 நாள்களுக்கு நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க - சீன நாடுகளுக்கு இடையே நடக்கும் வர்த்தக போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதன் விளைவாக இந்திய நிறுவனங்களுக்கு ஜாக்பாட் கிடைத்துள்ளது.
சீனா மீது அமெரிக்கா 125 சதவிகிதம் வரை வரி வதித்துள்ள நிலையில், சீன உற்பத்தியாளர்களுக்கான புதிய ஆர்டர்கள் வெகுவாக குறைந்துள்ளன. சீனா எலக்ட்ரானிக் கருவிகளின் டிமாண்ட் குறைந்துள்ள நிலையில், அதை சரிகட்ட சீனா நிறுவனங்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்தியாவுக்கு ஜாக்பாட்:
அந்த வகையில், எலக்ட்ரானிக் பாகங்களை தயாரிக்கும் சீன நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களுக்கு 5 சதவிகிதம் வரை தள்ளுபடி விலையில் தாங்கள் தயாரிக்கும் மின்னணு பாகங்களை விற்க முன்வந்துள்ளது. இதனால், இந்திய உற்பத்தியாளர்களுக்கு 2 முதல் 3 சதவிகிதம் வரை லாபம் கிடைக்கலாம் என கூறப்படுகிறது. இந்த பலன், வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, இந்தியாவில் டிவி, ஃப்ரிட்ஜ், ஸ்மார்ட் போன்கள் ஆகியவற்றின் விலை குறையலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்தியாவில் விற்கப்படும் எலக்ட்ரானிக் பொருள்களில் 75 சதவிகிதம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவை.
இதுகுறித்து கோத்ரேஜ் நிறுவனத்தின் வர்த்தக பிரிவு தலைவரான கமல் நந்தி கூறுகையில், "சீனாவில் உள்ள உதிரிபாக உற்பத்தியாளர்கள் பெரும் அழுத்தத்தில் உள்ளனர். அமெரிக்காவில் இருந்து வரும் ஆர்டர்கள் குறைந்ததால் அதன் விலை குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்" என்றார்.
கோடாக், தாம்சன் மற்றும் ப்ளூபங்க்ட் தயாரிக்கும் பொருள்களை இந்தியாவில் விற்க உரிமம் பெற்றுள்ள சூப்பர் பிளாஸ்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்வா கூறுகையில், "அச்சம் நிலவி வருகிறது. சீனாவிலிருந்து அமெரிக்க செய்யும் ஏற்றுமதிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்திய நிறுவனங்களும் சீன உதிரிபாக தயாரிப்பாளர்களும் 5% வரை விலைகளைக் குறைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்" என்றார்.





















