சிங்கங்களுக்கு சீதை, அக்பர் பெயர்! வனத்துறை அதிகாரி சஸ்பெண்ட்!
சிங்கங்களுக்கு சீதை, அக்பர் என பெயர் சூட்டிய வனத்துறை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக வெறுப்புணர்வு பரப்பப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், சமீபத்தில் புதிய சர்ச்சை வெடித்தது. சீதா என்ற பெண் சிங்கத்தையும் அக்பர் என்ற ஆண் சிங்கத்தையும் ஒரே வனவிலங்கு பூங்காவில் வைத்திருக்க விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
சிங்கங்களுக்கு பெயர் வைப்பதில் சர்ச்சை:
எதிர்ப்பு தெரிவித்தது மட்டும் இன்றி, இரு சிங்கங்களையும் ஒரே வனவிலங்கு பூங்காவில் வைத்திருக்கும் வனத்துறையின் முடிவுக்கு எதிராக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கொல்கத்தா உயர் நீதிமன்ற ஜல்பைகுரி கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், "சிங்கங்களுக்கு மாநில வனத்துறை பெயர் சூட்டியுள்ளது. மேலும், 'அக்பர்' சிங்கத்துடன் 'சீதா' சிங்கத்தை வைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயலாகும். சிங்கத்தின் பெயரை "சீதா" என்பதிலிருந்து வேறு ஏதேனும் பெயர் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு கோரிக்கை விடுத்தது.
இந்த சர்ச்சைக்குரிய சிங்கங்கள், முதலில் திரிபுராவில் உள்ள செபஹிஜாலா விலங்கியல் பூங்காவில் இருந்துள்ளது. பின்னர், விலங்கு பரிமாற்ற திட்டத்தின்படி, மேற்குவங்கத்தில் உள்ள சஃபாரி பூங்காவிற்கு மாற்றப்பட்டுள்ளன. மேற்குவங்க பூங்காவிற்கு கொண்டு செல்வதற்கு முன்பே இந்த பெயர்தான் வைக்கப்பட்டிருப்பதாக வனத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
திரிபுரா பாஜக அரசு எடுத்த முடிவு:
இந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர் நீதின்றம், "தெய்வம் அல்லது வரலாற்று ரீதியாக மதிக்கப்படும் நபர்களின் பெயரை சூட்டுவது நல்லதல்ல. நீங்கள் ஏன் சிங்கத்திற்கு சீதா மற்றும் அக்பரின் பெயரை வைத்து சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும்? அரசு ஏற்கனவே பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. இந்த சர்ச்சை தவிர்க்கப்படக்கூடிய ஒன்று. தயவுசெய்து சர்ச்சை கூறிய பெயர்களை தவிர்க்க வேண்டும். இந்த விலங்குகளுக்கு வேறு பெயர்களை வைக்க வேண்டும்" என தெரிவித்தது.
பல முக்கிய வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, தேவையற்ற விவகாரத்தை விசாரித்ததாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தையும் வழக்கு தொடர்ந்த விஷ்வ இந்து பரிஷத் அமைப்பையும் பலர் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சிங்கங்களுக்கு சீதை, அக்பர் என பெயர் சூட்டிய வனத்துறை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சரச்சைக்கு மத்தியில் திரிபுரா மாநிலத்தின் தலைமை வனக்காவலர் பிரவின் லால் அகர்வாலை திரிபுரா அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. இவர், 1994 பேட்ச் ஐஎஃப்எஸ் அதிகாரி ஆவார். மேற்குவங்கத்திற்கு சிங்கங்களை அனுப்புவதற்கு முன்பு, சீதை, அக்பர் என இவர்தான் பெயர் சூட்டியுள்ளார். திரிபுராவில் பாஜக ஆட்சி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.