Tripura Delta Plus : திரிபுராவில் 138 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று..!
திரிபுராவில் 138 நபர்களுக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் முதல் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. உருமாறிய டெல்டா வகை கொரோனாவால் கடந்த மே மாதத்தில் தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 3 லட்சம் என்ற அபாய கட்டத்தை தாண்டியது. இதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக நாட்டில் கொரோனா தொற்று படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது தினசரி பாதிப்பு 40 ஆயிரம் என்ற அளவில் உள்ளது.
இந்த நிலையில், நாட்டில் டெல்டா வைரசை காட்டிலும் மிகவும் அதிக வீரியம் கொண்ட டெல்டா பிளஸ் கொரோனா வைரசின் தாக்கம் கண்டறியப்பட்டது. நாட்டில் முதன்முதலில் இந்த தொற்று கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோசும் செலுத்திக் கொண்ட ஒரு மூதாட்டிக்கு கண்டறியப்பட்டது. பின்னர், மகாராஷ்ட்ரா, கேரளா உள்பட ஏராளமான மாநிலங்களிலும் டெல்டா பிளஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது டெல்டா பிளஸ் கொரோனா தொற்று வடகிழக்கு மாநிலமான திரிபுராவிலும் கண்டறியப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் அளித்துள்ள தகவலின்படி, திரிபுரா மாநிலத்தில் இருந்து 151 மாதிரிகள் மேற்கு வங்காளத்தின் கல்யாணியில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. அவர்களில் 138 நபர்களுக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 நபர்களுக்கு டெல்டா கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மீதமுள்ள 3 நபர்களுக்கு ஆல்பா வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. திரிபுராவின் மிகப்பெரிய மேற்கு மாவட்டத்தில் அதிகளவிலான டெல்டா பிளஸ் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கு மட்டும் 115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீபகிஜாலா மாவட்டத்தில் எட்டு பேருக்கும், கோமதி மாவட்டத்தில் 5 பேருக்கும், உனகோட்டியில் 4 பேருக்கும், தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களில் தலா 2 பேருக்கும் கோவாய் மற்றும் தலாயில் தலா 1 நபர்களுக்கும் டெல்டா பிளஸ் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்டா பிளஸ் கொரோனா தொற்று டெல்டா கொரோனா வைரசை காட்டிலும் மிகவும் ஆபத்தானது என்றும், இது நுரையீரலை பாதிக்கும் என்பதால் மக்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அந்த மாநில சுகாதாரத்துறை இயக்குனர் சுபஷிஷ் தெபர்மா தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அந்த மாநிலத்திலும் ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த மாநிலத்தில் வார ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சனிக்கிழமை இரவு 12 மணிமுதல் திங்கள் கிழமை காலை 6 மணிவரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.