Derek O'Brien: மணிப்பூர் தொடர்பாக பேசிய டெரக் ஓ பிரையன்...உச்சக்கட்ட கோபம் அடைந்த மாநிலங்களவை தலைவர்
மாநிலங்களவையின் இன்றைய கூட்டத்தில், விதி எண் 267 இன் கீழ் மணிப்பூர் தொடர்பாக விவாதிக்க இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நோட்டீஸ் வழங்கினர்.
மணிப்பூர் விவகாரம் தேசத்தின் மனசாட்சியை உலுக்கிய நிலையில், நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக விரிவான விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால், இன்று வரையில் விரிவான விவாதத்திற்கு மத்திய அரசு சம்மதிக்கவில்லை.
மணிப்பூர் தொடர்பாக பேசிய டெரக் ஓ பிரையன்:
இந்த சூழலில், மாநிலங்களவையின் இன்றைய கூட்டத்தில், விதி எண் 267 இன் கீழ் மணிப்பூர் தொடர்பாக விவாதிக்க இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நோட்டீஸ் வழங்கினர்.
இதற்கிடையே, நாடாளுமன்ற விதிகள் மீறப்பட்டது தொடர்பாக பேச அனுமதிக்குமாறு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரக் ஓ பிரையன், மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரிடம் கோரிக்கை விடுத்தார். அப்போது, எந்த விதியின்படி பேச விரும்புகிறீர்கள் என ஜெகதீப் தன்கர் கேள்வி எழுப்பினார்.
மாநிலங்களவை தலைவரின் கோபத்திற்கு காரணம் என்ன?
விதி எண் 267கீழ் மணிப்பூர் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள், கடந்த ஜூலை 20ஆம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்து கோரிக்கை விடுத்து வருவதாக டெரக் ஓ பிரையன் பதில் அளித்தார். இதை கேட்டு கடும் கோபம் அடைந்த மாநிலங்களவை தலைவர், "அவையில் இருந்து டெரக் ஓ பிரையன் உடனடியாக வெளியேற வேண்டும்" என உத்தரவிட்டார்.
அவை நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து இடையூறு விளைவிப்பதாகவும் மாநிலங்களவை தலைவரை மதிக்கவில்லை எனக் கூறி, டெரக் ஓ பிரையனை சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்தை பியூஷ் கோயல் கொண்டு வந்தார்.
"சபையின் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக வேண்டுமென்றே சீர்குலைத்ததற்காகவும், மாநிலங்களவை தலைவருக்கு மதிக்காததற்காகவும் சபையில் தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தியதற்காகவும் டெரெக் ஓ பிரையனை மீதமுள்ள கூட்டத்தில் இருந்து இடைநீக்கம் செய்வதற்கான ஒரு தீர்மானத்தை கொண்டு வர விரும்புகிறேன்" என்றார்.
உடனடியாக, மாநிலங்களவை அவை தலைவரின் இருக்கைக்கு அருகே வந்து திரிணாமுல் எம்பிக்கள் கோஷம் எழுப்ப தொடங்கினர். இன்றைய கூட்டம் தொடங்குவதற்கு முன்பே ட்வீட் செய்த டெரக் ஓ பிரையன், "பிரதமர் கடந்த 19 நாட்களாக நாடாளுமன்றத்தில் இருந்து காணாமல் போனதால், நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்திற்கு மாத்திரம் வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது" என பதிவிட்டிருந்தார்.
மணிப்பூர் தொடர்பாக பிரதமர் மோடியை பதில் அளிக்க வைப்பதற்காக மக்களவையில் காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. அதன் மீதான விவாதம் இன்று தொடங்கியுள்ளது.
நேற்றைய கூட்டத்தில், டெல்லி அதிகாரிகள் நியமன மசோதா மீதான விவாதத்தின்போத, டிராமா பண்ண வேண்டாம் என மாநிலங்களவை தலைவர், டெரக் ஓ பிரையனை கடிந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.