Trai Mobile Number: ரைட்ரா, இனி ரீசார்ஜ் மட்டும் போதாதாம்..! மொபைல் நம்பருக்கும் கட்டணம்? - TRAI புதிய விதி சொல்வது என்ன?
Trai Mobile Number Fee: செல்ஃபோன் பயனாளர்கள் இனி தங்களது எண்ணிற்காகவும் பிரத்யேக கட்டணம் செலுத்த வேண்டும் என்ற, புதிய விதி அமலுக்கு வரக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
Trai Mobile Number Fee: தங்களது எண்ணிற்கு கூட பிரத்யேக கட்டணம் செலுத்த வேண்டும் என்ற தகவல், செல்ஃபோன் பயனாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செல்ஃபோன் எண்ணுக்கும் கட்டணம்:
தேர்தலுக்குப் பிறகு மொபைல் போன் பயன்படுத்துவோருக்கு பெரும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அந்த வரிசையில், எதிர்காலத்தில் உங்கள் ஃபோன் ஆபரேட்டர் அதாவது உங்களுக்கான சேவையை வழங்கும் நிறுவனம், உங்களது ஸ்மார்ட்போன் மற்றும் லேண்ட்லைன் எண்ணிற்கு என பிரத்தியேக கட்டணம் வசூலிக்கலாம். தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI யின் திட்டம் செயல்படுத்தப்பட்டால், இந்த முறை விரைவில் நடைமுறைக்கு வரும். ஃபோன் எண்கள் ' மதிப்புமிக்க வரம்புகளற்ற பொது வளம்' என்றும், இதற்காக மொபைல் ஆபரேட்டர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கலாம் என்றும் TRAI கருதுகிறது. அதனை பயனாளர்களிடமிருந்து வசூலிக்க ஆப்ரேட்டர்களுக்கு அனுமதி அளிக்க விரும்புகிறது.
எண் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை:
குறைவாக பயன்படுத்திய தொலைபேசி எண்களை வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு, அபராதம் விதிக்கவும் TRAI திட்டமிட்டுள்ளது. உதாரணமாக, ஒருவரிடம் 2 சிம் கார்டுகள் இருந்தால், அவற்றில் ஒன்றை அவர் பயன்படுத்தவில்லை. ஆனால் வாடிக்கையாளர் வெளியேறிவிடுவார் என்ற அச்சத்தில் நிறுவனம் அதை மூடாமல் உள்ளது. இந்நிலையில், குறைவாக பயன்படுத்தப்பட்ட எண்களை பதுக்கி வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதன் மூலம் சரியான பயன்பாட்டை ஊக்குவிக்க முடியும் என டிராய் நம்புகிறது. எந்தவொரு வரையறுக்கப்பட்ட அரசாங்க வளமும் சரியாகப் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, அதைக் கொடுக்கும்போது கட்டணம் விதிக்கப்படலாம். டிராய் கூற்றின்படி, ஸ்பெக்ட்ரம் போலவே தொலைபேசி எண்களும் அரசாங்கத்திற்கு சொந்தமானது. லைசென்ஸ் பெறும்போது, குறிப்பிட்ட எண்களை மட்டுமே பயன்படுத்த டெலிகாம் நிறுவனங்களுக்கு அரசாங்கம் உரிமை அளிக்கிறது.
புதிய தொலைத்தொடர்பு சட்டம்:
கடந்த ஆண்டு டிசம்பரில் நிறைவேற்றப்பட்ட புதிய தொலைத்தொடர்பு சட்டத்திலும் இதே போன்ற விதி உள்ளது. இதன் கீழ், டெலிகாம் நிறுவனங்களிடமிருந்து எண்களுக்கு நிலையான கட்டணத்தை எடுத்துக் கொள்ளலாம். தொழில்நுட்ப மொழியில், இது 'டெலிகாம் அடையாளங்காட்டிகள்' என்று அழைக்கப்படுகிறது. மொபைல் எண்களுக்கு கட்டணம் வசூலிக்கும் இந்த முறை ஏற்கனவே பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது என்று TRAI கூறுகிறது. ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், பெல்ஜியம், பின்லாந்து, பிரிட்டன், கிரீஸ், ஹாங்காங், பல்கேரியா, குவைத், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, போலந்து, நைஜீரியா, தென்னாப்பிரிக்கா மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளில் தொலைபேசி எண்களுக்கு கட்டணம் விதிக்கப்படுகிறது.
கட்டணம் வசூலிக்கும் முறை..!
இந்தப் பணம் சில சமயங்களில் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இருந்தும், சில சமயங்களில் நேரடியாக எண்ணை பயன்படுத்துபவர்களிடமிருந்தும் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் வசூலிக்கும் முறைகளையும் TRAI விளக்கியுள்ளது. TRAI இன் கூற்றுப்படி, அரசாங்கம் மொபைல் நிறுவனங்களுக்கு மூன்று வழிகளில் கட்டணம் வசூலிக்க முடியும். முதலில், ஒவ்வொரு தொலைபேசி எண்ணுக்கும் ஒரு முறை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். இரண்டாவது வழி, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து எண்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மூன்றாவது வழியில், சில சிறப்பு மற்றும் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய எண்களுக்கான ஏலத்தை அரசாங்கம் மேற்கொள்ளலாம்.