Morning Headlines July 26: அதிரப்போகும் நாடாளுமன்றம்.. வேறு தேதியில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி? முக்கியச் செய்திகள் இதோ..!
Morning Headlines July 26: இந்தியா முழுவதும் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் காலைச் செய்திகளில் காணலாம்.
- மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்.. அதிரப்போகும் நாடாளுமன்றம்
பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக இன்று நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.கடந்த வியாழக்கிழமை தொடங்கிய நாடாளுமன்றம் மணிப்பூர் பிரச்னை தொடர்பாக இரு அவைகளும் முடங்கியுள்ளது. முன்னதாக, நாடாளுமன்ற முடக்கத்திற்கு தீர்வு காண எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதில் "மணிப்பூர் பிரச்னையை விவாதிக்க அரசாங்கம் தயாராக உள்ளது” என தெரிவித்திருந்தார்.
- சென்னையில் இன்று தொடங்குகிறது “ஜி20 சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு” ..
சென்னையில் இன்று முதல் 3 நாட்கள் நடைபெறும் ஜி20 சுற்றுசூழல் மாநாட்டில் ஜி20 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். சுற்றுசூழல் மாநாடு ஏற்கனவே மும்பை, பெங்களூரு, குஜராத் ஆகிய மாநிலங்களில் நடந்துள்ளது. இன்று தொடங்கும் மாநாட்டில் 135 பேர் பங்கேற்கின்றனர்.ஜி20 தலைமையின் போது, நாடு முழுவதும் பல இடங்களில் 32 வெவ்வேறு துறைகளில் சுமார் 200 கூட்டங்களை இந்தியா நடத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அதிசயம் நடத்திய ‘ஆபரேஷன் விஜய்’..இன்று கார்கில் விஜய் திவாஸ் தினம்..
கடந்த 1999 ம் ஆண்டு கார்கில் போரின்போது நாட்டிற்காக தியாகம் செய்த இந்திய வீரர்களின் வீரம் மற்றும் தைரியத்தை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ம் தேதி நாடு முழுவதும் கார்கில் விஜய் திவாஸ் தினம் கொண்டாடப்படுகிறது. கார்கில் விஜய் திவாஸ் தினத்தை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பட்ட மக்கள் தங்களது மரியாதையை செலுத்தி வருகின்றனர்.
- எதிர்பார்ப்பின் உச்சத்தில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி.. உலகக்கோப்பை போட்டிகளில் தேதி மாற்றமா?
ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெறும் ஆட்டமானது வேறு தேதிக்கு மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் அக்டோபர் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அன்றைய தேதியில் இந்தியா முழுவதும் நவராத்திரி தொடங்குவதால் வேறு தேதிக்கு மாற்ற பிசிசிஐ-க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
- மூன்று மாதங்களுக்கு பிறகு..பிராட்பேண்ட் இணைய சேவைக்கு அனுமதி..மணிப்பூர் அரசு உத்தரவு
கடந்த மே 3ஆம் தேதி, மணிப்பூரில் இனக்கலவரம் வெடித்தது. கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் நாட்டையே உலுக்கிய நிலையில், மூன்று மாதங்களுக்கு பிறகு, பிராட்பேண்ட் இணைய சேவை மீதான தடையை மணிப்பூர் அரசு திரும்ப பெற்றுள்ளது. இருப்பினும், மொபைல் இன்டர்நெட் சேவை மீதான தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.