உயரும் பெட்ரோல், தங்கம் விலை முதல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வரை... இன்றைய டாப் செய்திகள் இதோ
உயரும் பெட்ரோல், தங்கம் விலை முதல்... இலக்கியத்துக்கான நோபல் பரிசு வரை... இன்றைய முக்கிய செய்திகள் என்னவென பார்க்கலாம்.
விளையாட்டு வீரர்களுக்கு ரூ.4 கோடி ஊக்கத்தொகை - மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பாராலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பதக்கங்கள் மற்றும் பட்டங்களை வென்ற 15 தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் 4 கோடி ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி சிறப்பித்தார். பாராலிம்பிக் 2020 போட்டிகளில் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 2 கோடி ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் வழங்கினார்.
தங்கம் விலை உயர்வு
சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.192 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 35288 -க்கு விற்பனையானது.
குயின்ஸ் லேண்ட் நிலத்தை மீட்க உத்தரவு
குயின்ஸ் லேண்ட் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள கோவில் நிலங்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது
பூஜை விடுமுறையை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள்
பூஜை விடுமுறையை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். வெளியூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய 3 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிலைகளை அகற்ற வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
தமிழகம் முழுவதும் பொது இடங்கள், நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அடையாளம் கண்டு அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொது இடங்கள்,சாலைகளில் சிலைகள் வைப்பதை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் இல்லையென்றால் மக்கள் மனதில் தற்போது நிலவும் அச்சத்தை போக்க முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
திருவள்ளுவர் பல்கலைக்கழக அலுவலர் வீட்டில் சோதனைதிருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் போலிசான்றிதழ்களைக் கொடுத்து ஊழியர்களை பணியமர்த்தியதாக புகாரளிக்கப்பட்டது. இதனையடுத்து முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர்.
குறையும் கொரோனா தொற்று
தமிழகத்தின் இன்று 1390 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 27 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
காவிரி நதியில் மருந்துசார் மாசுப்பொருள்கள்
காவிரி நதியில் மருந்துசார் மாசுப்பொருள்கள் அதிக அளவில் இருப்பதாக சென்னை ஐஐடியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
உயரும் எரிபொருட்கள் விலை
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 100.75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
போதை மருந்து பயன்பாடு விவகாரத்தில் கைதான ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
லக்கிம்பூர்: உபி அரசு அறிக்கை தாக்கல் உச்ச நீதிமன்றம் உத்தரவு
லக்கிம்பூர் வன்முறையில் விவசாயிகள் உயிரிழந்தது தொடர்பாக எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்து நாளைக்குள் உத்தரப்பிரதேச அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
லக்கிம்பூர் வன்முறையை கண்டித்ததையடுத்து பாஜக நிர்வாகக் குழுவில் இருந்து வருண் காந்தி, அவரது தாயார் மேனகா காந்தி நீக்கம் செய்யப்பட்டனர். அதேபோல வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாக பேசிய மத்திய அமைச்சர் பிரேந்தர் சிங் பெயரும் நீக்கப்பட்டுள்ளது.
அப்துல்ரசாக் குர்னாவுக்கு இந்த ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு
தான்சானியா நாட்டு எழுத்தாளர் அப்துல்ரசாக் குர்னா இந்த ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுளளார். அகதிகள் பிரச்சினை, பின் காலனியம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான எழுத்துக்களில் முத்திரை பதித்ததற்காக அப்துல்ரசாக் குர்னாவுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பாகிஸ்தான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை அணி தோல்வி
ஐ.பி.எல்லில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியடைந்தது. ப்ளே ஆஃப் வாய்ப்பை பிரகாசமாக்கியது பஞ்சாப் கிங்க் அணி.