Montha Cyclone : நெருங்கும் மோன்தா புயல்... 6 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை! பள்ளிகளுக்கு விடுமுறை
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மோன்தா புயல் எதிரொலியால் இன்று இரவு 10 மணி வரை 6 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
10 மணி வரை மழைக்கு வாய்ப்பு:
மோன்தா புயல் காரணமாக இன்று இரவு 10 மணி வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருவள்ளூர்,விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
மோன்தா புயல்:
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வானிலை மையத்தின் தகவல்படி திங்கள்கிழமை (அக்டோபர் 27, 2025) தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு-மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக தீவிரமடைந்து செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 28, 2025) காலைக்குள் 'தீவிர புயலாக' மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காற்றின் வேகம் மணிக்கு 90-100 கி.மீ.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு நோக்கி நகர்ந்து ஆந்திரப் பிரதேசத்தின் மச்சிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே, காக்கிநாடாவைச் சுற்றியுள்ள கடற்கரையைக் கடக்கும். இது அக்டோபர் 28 ஆம் தேதி மாலை அல்லது இரவில் ஒரு கடுமையான புயலாக மாறும். கரையைக் கடக்கும்போது, காற்றின் வேகம் மணிக்கு 90-100 கிமீ முதல் 110 கிமீ வரை அதிகரிக்கும்.
அரபிக் கடலில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நீடிக்கிறது, இது மணிக்கு 13 கிமீ வேகத்தில் தென்மேற்கு நோக்கி நகர்கிறது. அக்டோபர் 26 காலை நிலவரப்படி, இது மும்பைக்கு மேற்கு-தென்மேற்கே சுமார் 760 கிமீ தொலைவிலும், கோவாவிற்கு மேற்கே 790 கிமீ தொலைவிலும், மங்களூருக்கு மேற்கு-வடமேற்கே 970 கிமீ தொலைவிலும் அமைந்திருந்தது. இந்தப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் கிழக்கு-மத்திய அரபிக்கடலில் தென்மேற்காக நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திராவுக்கு 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தியில், ஆந்திரப் பிரதேசம் அக்டோபர் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும், தெலுங்கானா, ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த மூன்று நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஆந்திரப் பிரதேசம்: அக்டோபர் 27–29 வரை சிவப்பு எச்சரிக்கை
ஒடிசா: அக்டோபர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளுக்கு ரெட் அலர்ட்
தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர்: அக்டோபர் 28 ஆம் தேதிக்கு ரெட் அலர்ட்
தமிழ்நாடு: அக்டோபர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
பள்ளிகளுக்கு விடுமுறை:
இந்நிலையில், மோன்தா புயல் காரணமாக புதுச்சேரியில் உள்ள ஏனாமில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை முதல் 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மோன்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை ஏனாமில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.






















