Governor RN Ravi: உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த ஆளுநர் ஆர்.என்.ரவி.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு...
ஒரு வார பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ஒரு வார பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே அதிகப்படியான கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது. சட்டப்பேரவை நிகழ்வு, செந்தில் பாலாஜி விவகாரம், ஆன்லைன் ரம்மி தடை தொடர்பான சட்ட மசோதா உள்ளிட்ட பல நிகழ்வுகளில் ஆளுநர் தன் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டு செயல்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், கூட்டணி கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர்.
குறிப்பாக அமலாக்கத்துறையால் கைது நடவடிக்கைக்கு உட்பட்டதால் அமைச்சர் செந்தில் பாலாஜி பதவியில் தொடர்வது தொடர்பான கோப்புக்கு ஒப்புதல் அளிக்க மறுத்தார். செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக முதலமைச்சருக்கு ஆளுநர் கடிதம் எழுதினார். அவர் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் பதிலளிக்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். இந்த சம்பவம் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தலின் பேரில் செந்தில் பாலாஜி நீக்கம் தொடர்பான உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து பிரச்சினைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி முற்றுப்புள்ளி வைத்தார். இதனையடுத்து ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நீதிமன்ற விசாரணை தொடங்க அனுமதிக்குமாறும், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்குமாறும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநருக்கு கடிதம் எழுதினார். இந்த விவகாரத்திலும் கருத்து மோதல் ஏற்பட்டது.
இதற்கிடையில் ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. தனது கடமையை மட்டுமே செய்ய வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
ஆளுநர் டெல்லி பயணம்
இப்படி பரபரப்பான அரசியல் சூழல் தமிழ்நாட்டில் நிலவி வரும் நிலையில் ஆளுநர் ஒருவார பயணமாக நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.