Annamalai: 'புதுசா இருக்கே..' சி.எஸ்.கே. வெற்றி பெற்றதற்கு பா.ஜ.க.வே காரணம் - அண்ணாமலை சொன்ன காரணத்தை பாருங்க..!
ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் பா.ஜ.க.தான் என்று அண்ணமலை தெரிவித்தார்.
சென்னை அணியின் வெற்றியை தொடர்ந்து குஜராத்திகள் தோற்கடிக்கப்படுவார்கள் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்திருந்த கருத்துக்கு சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மகுடம் சூட்டிய சென்னை:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல். 2023 இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை வென்றுள்ளது. இதை ஒட்டுமொத்த சென்னை ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சென்னை அணியின் வெற்றிக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிலையில் அதை ரீ ட்விட் செய்து தன்னுடைய கருத்தை பதிவிட்டிருந்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா “கோடிக்கணக்கான ரசிகர்கள் சி.எஸ்.கே. வெற்றியை கொண்டாடுவது போன்றே முதல்வரும் கொண்டாடி வருகிறார். உண்மையான தலைவன் ஒருவன் இருந்தால், எப்பேற்பட்ட எதிராளியையும் வீழ்த்த முடியும். எவ்வளவு வலிமையாக இருப்பதாக குஜராத் காட்டி கொண்டாலும், அவர்கள் தோற்கடிக்கப்படுவார். பல குஜராத்திகளை நாம் கடந்த காலத்தில் தோற்கடித்துள்ளோம், இனியும் தோற்கடிப்போம்" என்று தெரிவித்திருந்தார்.
பா.ஜ.க.வே வெற்றிக்கு காரணம்:
இந்நிலையில் இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடன் கேள்வி எழுப்பபட்டது. அது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் “சென்னை அணியில் வெற்றிக்கு தேவையான ரன்களை அடித்து ஜெயிக்க வைத்தது ஒரு பாஜக காரியகர்த்தா, ஜடேஜாவின் மனைவி ஒரு பா.ஜ.க. எம்.எல்.ஏ, ஜடேஜா குஜராத்தை சேர்ந்தவர்.
சி.எஸ்.கே. டீமை விட குஜராத் அணியில் தமிழர்கள் அதிகமாக உள்ளனர். அதையும் கொண்டாடுகிறோம். 96 ரன்களை அடித்த தமிழனையும் கொண்டாடுகிறோம். சென்னை அணியில் ஒரு தமிழன் கூட ஆடவில்லை. ஆனாலும் நாம் சி.எஸ்.கே. அணியை கொண்டாடுகிறோம் அதற்கு காரணம் தோனி தான். கடைசி வின்னிங் ரன் அடித்து சி.எஸ்.கே.வை வெற்றி பேற வைத்தது ஒரு பா.ஜ.க. காரியகர்த்தா என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். அதே தான் 2024 தேர்தலிலும் நடக்கும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஐபிஎல் விளையாட்டு களமும் அரசியல் களமாக மாறியுள்ளது.
வெற்றியைத் தேடித்தந்த ஜடேஜா:
குஜராத் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திலேயே நீடித்த நிலையில் அது ஒரு வலிமையான அணியாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் நேற்று நடந்த பைனல் போட்டியில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், ஒரு சிக்ஸும், ஒரு ஃபோரும் அடித்து த்ரில் வெற்றியை தேடி தந்தார் ஜடேஜா. இதனை சிஎஸ்கே ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வரும் நிலையில் தற்போது இது அரசியால் சார்ந்த விவாதமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.