”உங்களை போலவே நானும் வேதனை அடைந்தேன்”.. கள்ளச்சாராயம் சம்பவத்திற்கு முதல் முறையாக பேசிய முதல்வர்!
விழுப்புரம், சேலம், திருச்சி, செங்கல்பட்டில் இருந்து 57 மருத்துவர்கள் கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்:
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து வருகிறார். அப்போது பேசிய அவர், “ கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த்வர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பங்கேற்று கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்பதில் கொள்கை உறுதி கொண்டவன் இந்த முதலமைச்சர். கருத்துகளை தெரிவித்த உறுப்பினர்களுக்கு நன்றி. எதிர்க்கட்சித் தலைவரும் அவைக்குள் இருந்து தனது கருத்துகளை தெரிவித்திருக்கலாம். அரசியல் காரணங்களுக்காக எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்துவிட்டார்.
உயிரிழந்த மிகவும் துயரமான சம்பவம் குறித்து உங்களை போலவே நானும் மிகுந்த வேதனையும், வருத்தமும் அடைகிறேன். விஷச் சாராயம் அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம், சேலம், திருச்சி, செங்கல்பட்டில் இருந்து 57 மருத்துவர்கள் கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட 164 பேரில் 117 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கள்ளச்சாராயம் அருந்தி 47 பேர் உயிரிழந்துள்ளனர். மருந்துகள் தேவைப்பட்டால் வெளிச்சந்தையில் வாங்கி, பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
விஷச்சாராயம் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விஷச் சாராயம் புதுச்சேரியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. சாராயத்தை விற்றவர்களிடம் இருந்து 200 லிட்டர் மெத்தனால் கைப்பற்றப் பட்டுள்ளது.” என பேசி வருகிறார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கூடுதல் நிவாரணங்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பெற்றோரை இழந்த குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான செலவை அரசே ஏற்கும்; குழந்தைகளுக்கு 18 வயது வரை தலா ரூ.5000 வழங்கப்படும். பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதியாக வைக்கப்படும்” என்று தெரிவித்தார்.
மேலும் சில..
நமது அரசுப் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது 4 லட்சத்து 63 ஆயிரத்து 710 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4 லட்சத்து 61 ஆயிரத்து 84 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த அரசுப் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை 565 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள்
16 லட்சத்து 51 ஆயிரத்து 633 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
1 லட்சத்து 42 ஆயிரத்து 19 லிட்டர் எரிசாராயம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
28 லட்சத்து 79 ஆயிரத்து 605 லிட்டர் ஊறல் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் மொத்தம் 45 நிரந்தர மதுவிலக்குச் சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு சட்டவிரோத மதுபான கடத்தல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
கள்ளச்சாராயத்தில் முக்கியமாக மெத்தனால் பயன்பாட்டால் உயிரிழப்புகள் ஏற்படும் நிலையில் மாநிலத்தில் உள்ள அனைத்து மெத்தனால் உற்பத்தி அலகுகள். பயனர்கள், மெத்தனால் வைத்திருப்பதற்கான மற்றும் பயன்படுத்துவதற்கான உரிமம் பெற்ற தொழிற்சாலைகள் போன்றவற்றைத் தணிக்கை செய்ய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அவர்களின் மாதாந்திர அறிக்கைகள் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுத் தலைமையகத்தில் கண்காணிக்கப்படுகின்றன. ஆனால், அண்டை மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் மெத்தனால் சட்டவிரோதமாக கள்ளத்தனமான முறையில் நம் மாநிலத்திற்குள் கொண்டு வரப்பட்டு இதுபோன்ற சம்பவங்களுக்குக் காரணமாக அமைந்து விடுகின்றது.
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மற்றும் போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது பாரபட்சமின்றி குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த அரசுப் பொறுப்பேற்றதிலிருந்து 14 ஆயிரத்து 606 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 10 ஆயிரத்து 154 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 58 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்
இப்படி இந்த அரசானது கள்ளச்சாராயத்தை அறவே ஒழிப்பதற்கு மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையிலும் இதுபோன்ற சில விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படுவது மிகவும் வேதனைக்குரியது.
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் இந்த அரசு செய்யும்.
அதனடிப்படையில், இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கவும், அவர்களின் எதிர்கால நலனை கருத்திற்கொண்டும். ஏற்கனவே அறிவிக்கப்பட்டு 10 இலட்சம் ரூபாய் நிவாரண நிதியுடன் பின்வரும் நிவாரணங்கள் கூடுதலாக வழங்கப்படும்.” என தெரிவித்தார்.