(Source: ECI/ABP News/ABP Majha)
Tirumala Tirupathi: 30 மணிநேரம்..! திருப்பதியில் சுவாமி தரிசனத்துக்காக நீண்டவரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்..
திருமலை திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் இலவச தரிசனத்திற்கு நேரம் அதிகமாக எடுக்கிறது.
புரட்டாசி 3-வது சனிக்கிழமையில் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் திருமலைக்கு படை எடுத்த வண்ணம் உள்ளனர். இதனால் ஏழுமலையானை தரிசனம் செய்ய இன்று 6ம் தேதி மாலை நிலவரப்படி 30 மணி நேரம் ஆகும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா நேற்று காலை 5-ம் தேதி சக்கர ஸ்நான நிகழ்வுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து நேற்றிரவு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதனைத் தொடர்ந்து கொடிமரத்தில் ஏற்றப்பட்டிருந்த பிரம்மோற்சவக் கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு செய்யப்பட்டது. இந்த பிரம்மோற்சவத்தில் சுமார் 57 லட்சம் பக்தர்கள் பங்கேற்றதாக தேவஸ்தானம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்த நிலையில், தற்போது புரட்டாசி 3-வது சனிக்கிழமையன்று சுவாமியை தரிசிக்க வேண்டும் என்று நினைத்த பக்தர்கள் 4-ம் தேதி முதலே திருமலைக்கு குடும்பம்குடும்பமாக வந்து கொண்டிருக்கின்றனர்.
ஏற்கெனவே திருமலையில் இன்று மாலை நிலவரப்படி சுமார் 5 கி.மீ தொலைவிற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இவர்கள் சுவாமியை சர்வ தரிசனத்தில் (இலவச தரிசனம்) தரிசிக்க சுமார் 30 மணி நேரம் ஆகும் என தேவஸ்தானம் அறிவித்திருந்தது. அதாவது இன்று மாலை 6ம் தேதி சர்வ தரிசன வரிசையில் நின்றால், நாளை 7ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு சுவாமியை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
திருமலையில் பக்தர்கள் கூட்டம்:
ஆனால் இதனை அறியாத பக்தர்கள் ஆயிரக்கணக்கில் திருமலைக்கு வந்துகொண்டிருக்கின்றனர். இதனால், திருமலையில் தங்கும் அறைகள் கிடைக்காமல் பக்தர்கள் இரவில் கடும் குளிரைக் கூட பொருட்படுத்தாமல் ஏழுமலையானத் தரிசிப்பதற்காக காத்திருக்கின்றனர்.
மேலும் தற்போது கடந்த 2 நாட்களாக திருமலையில் மழை பெய்து வருகிறது. மழையில் நனைந்தும், குளிரில் நடுங்கியவாறும் பக்தர்கள் புரட்டாசி மாத 3வது சனிக்கிழமையன்று எப்படியாவது சுவாமியை தரிசிக்க வேண்டுமென பக்தியுடனும் ஆர்வத்துடனும் வரிசைகளில் காத்திருக்கின்றனர்.
மலை போல் குவிந்திருக்கும் திருமலை பக்தர்கள்:
வரிசையில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினர் உணவுப் பொட்டலங்கள், குடிநீர், பால், மோர், டீ, காபி முதலானவற்றை வழங்கி வருகின்றனர். நேற்று தேவஸ்தான அறங்காவலர் ஒய்.வி. சுப்பாரெட்டி, தலைமை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி உள்ளிட்டோர் நேரில் சென்று பக்தர்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, அவற்றை உடனுக்குடன் சரி செய்து கொடுத்தார்கள்.
கூட்டம் அதிகரித்துள்ளதால், திருமலையில் தங்குவதற்கு இடமும் இல்லை. மேலும் தலைமுடி காணிக்கை செலுத்துவதற்கும், லட்டுப் பிரசாதம் வாங்கவும், இலவச உணவு சாப்பிடவும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்தக் கூட்டம் நாளை 7ம் தேதி வெள்ளிக்கிழமை மேலும் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. ஆதலால், திருமலைக்கு வரும் பக்தர்கள் பொறுமை காக்க வேண்டும் எனவும் தேவைப்பட்டால் திருமலை யாத்திரையை தள்ளிப்போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது