தெலுங்கானா: ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து... பயணிகளின் நிலை என்ன?
தெலுங்கானாவில் எக்ஸ்பிரஸ் ரயில் தீ பிடித்ததில் 3 பெட்டிகள் எரிந்து சேதமானது.
தெலுங்கானா மாநிலம் யாதாத்ரியில் ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீப்பிடித்ததில் 3 பெட்டிகள் எரிந்து சேதமானது
இன்று ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் தெலுங்கானா மாநிலம் யாதாத்ரி மாவட்டத்தை கடக்கும் போது அதன் மூன்று பெட்டிகள் தீப்பிடித்தன. தீ விபத்து ஏற்பட்டவுடன், ஹவுராவில் இருந்து செகந்திராபாத் சென்ற ரயில், பொம்மை அல்லி கிராமம் அருகே நிறுத்தப்பட்டது. தீ மளமளவென பரவுவதற்குள் பெட்டிகளில் இருந்து குதித்ததால் பயணிகள் உயிர் தப்பினர். S3, S4, S5 ஆகிய பெட்டிகளில் அடர்ந்த கருப்பு புகை சூழ்ந்தது. தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த எக்ஸ்பிரஸ் ரயில் மேற்குவங்க மாநிலம் ஹவுரா மற்றும் ஐதராபாத் நகரின் சிக்கந்தராபாத் இடையே தினசரி இயக்கப்பட்டு வருகிறது.
ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் தீயில் கருகின. இந்த ரயிலில் சுமார் 1500 பயணிகள் பயணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் இதுவரை ஏற்படவில்லை. விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். உரிய நேரத்தில் தீ விபத்து கண்டறியப்பட்டு பயணிகள் கீழே இறங்கியதால் உயிர் சேதம் தவிர்க்கபப்ட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது . சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே அதிகாரிகள், மீட்பு பணிகளை தொடங்கி உள்ளனர். தீ பிடித்து எரிந்த பெட்டிகளுக்கும் மற்ற பெட்டிகளுக்கும் இடையே இருந்த இணைப்பு அகற்றப்பட்டது. இதன் காரணமாக மற்ற பெட்டிகளுக்கு தீ பரவாமல் தவிர்க்கப்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. ரயிலில் சார்ஜ் செய்யும் இடத்தில் பயணி ஒருவர் சிகரெட்டை புகைத்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக, அந்த ரயிலில் பயணித்த பயணி ஒருவர் கூறியதாக தெரிகிறது. ஃபலாக்நுமா எக்ஸ்பிரஸ் ரயில் மணிக்கு 80 முதல் 100 கிமீ வேகத்தில் இயங்கும் ரயிலாகும்.
மேலும் படிக்க