RahulGandhi: ஊடகங்கள் உதவாது; இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கக் காரணமே இதுதான் - ராகுல் காந்தி
இந்திய ஊடகங்கள் தொழிலதிபர்களின் கைகளில் சிக்கியுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்திய ஊடகங்கள் தொழிலதிபர்களின் கைகளில் சிக்கியுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் ராகுல் காந்தி இந்தியா முழுவதும் யாத்திரை மேற்கொண்டுள்ளார். பாஜக அரசின் வெறுப்பால் பிரிந்து கிடக்கும் இந்தியாவை ஒற்றுமையாக்க யாத்திரை மேற்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, "பாரதிய ஜனதா கட்சி நாட்டில் வெறுப்பை விதைத்துள்ளது அச்சத்தை கூட்டியுள்ளது. இந்த ஆட்சியின் கீழ் ஊடகங்கள் தொழிலதிபர்களில் கைகளில் சிக்கியுள்ளன. ஊடகங்களும் பாஜகவின் பிச்சார பீரங்கிகளாகிவிட்டன. ஊடகங்கள் எங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்காது என்பதால் தான் நாங்களே களத்தில் மக்களை சந்திக்கிறோம். நாங்கள் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கக் காரணமே இதுதான்”இவ்வாறு பேசும் போதே ராகுல் காந்தி இரண்டு முறை மைக்கை ஆஃப் செய்தார். அவ்வாறு செய்துவிட்டு அவர் பேச்சைத் தொடர்ந்தார். அப்போது அவர், “நாடாளுமன்றத்தில் இப்படித்தான் நாங்கள் மக்கள் பிரச்சனையை பேசினால் மைக்கை ஆஃப் செய்து விடுவார்கள். சீனா எல்லைப் பிரச்சனையை பேசினால் மைக் ஆஃப் செய்யப்படும். பணமதிப்பிழப்பு பற்றி பேசினால் மைக் ஆஃப் செய்யப்படும்” என்றார்.
மகாராஷ்டிராவின் நாண்டட் மாவட்டத்தில் 63வது யாத்திரை நாளில் அவர் பேசிய இந்தப் பேச்சை மக்கள் ஆர்வத்துடன் கேட்டனர். தொடர்ந்து பேசிய அவர், “மகாராஷ்டிராவில் அமைய வேண்டிய டாடா ஏர்பஸ் மிலிட்டரி ஏர்கிராஃப்ட் தொழிற்சாலை, வேதாந்தா பாக்ஸ்கான் செமி கண்டக்டர் தொழிற்சாலை எல்லாம் குஜராத்துக்கு தாரை வார்க்கப்பட்டன. ஏன் தெரியுமா? குஜராத் மாநிலம் தேர்தலை சந்திக்கவிருக்கிறது. அதனால் அங்குள்ள மக்களை சமாதானப்படுத்த அங்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த திட்டங்கள் எல்லாம் இரண்டு, மூன்று தொழிலதிபர்கள் வசம் ஒப்படைக்கப்படும். அவர்கள் எல்லோரும் பிரதமருக்கு நண்பர்கள். நாட்டின் ஒட்டுமொத்த வளமும் அவர்களின் கைகளுக்குள் பாய்ந்து கொண்டிருக்கிறது. துறைமுகங்கள், தொலைதொடர்பு, விவசாயம் என அனைத்துமே அவர்கள் வசம் தான் செல்கிறது.
இன்று நான் எனது யாத்திரையின் போது ஓர் இளைஞரை சந்தித்தேன். அவர் பேசும்போது நாட்டில் கல்வி முறையில் உள்ள குளறுபடியால் வேலை வாய்ப்புகள் இல்லை என்றார். ஒரு பெண் பிள்ளை தன்னைவிட தன் பெற்றோர் தனது சகோதரையே அதிகம் பேணுகின்றனர் என்றார். நாட்டில் பாலின பாகுபாடு அதிகரித்துள்ளது. பெண்களை மதிக்காத தேசம் முன்னேறாது. ஒரு சிறுவனுக்கு இந்த கல்வித் துறையில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு புரியாத விஷயம் புரிந்திருக்கிறது. பெரிய தொழில் நிறுவனங்கள் வேலை வாய்ப்பை உருவாக்குவதில்லை. பொதுத் துறை நிறுவனங்களும், சிறு தொழில் முனைவோரும் தான் வேலைகளை வழங்குகின்றன. ஆனால் அவற்றை அரசு நசுக்குகிறது.
நாட்டில் உள்ள இளைஞர்கள் தாய் நாட்டுக்கு சேவை செய்ய ராணுவத்தில் இணைய விரும்புகின்றனர். ஆனால் இந்த அரசோ அவர்களுக்கு 4 ஆண்டுகள் மட்டுமே வாய்ப்பு தருகிறது. அக்னிபாதை என்ற திட்டத்தின் மூலம் தாய்நாட்டு சேவை கனவை கூட சிதைக்கிறது.
சீனா நம் நாட்டின் நிலப்பரப்பை அங்குலம் அங்குலமாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் நம் பிரதமர் அதனை மறுத்துக் கொண்டே இருக்கிறார். அப்படியென்றால் எதற்காக அவ்வப்போது சீன ராணுவத்துடன் இந்திய ராணுவம் பேச்சுவார்த்தை நடத்துகிறது என்பதை மட்டும் பிரதமர் மோடி விளக்கினால் நன்றாக இருக்கும்.
நாட்டிலிருந்து கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக பணமதிப்பிழப்பு செய்வதாகச் சொன்னார்கள். ஆனால் ரூ.500, ரூ.1000 பண மதிப்பு நீக்கத்தால் அதிகாரமும், பணமும் ஒரு சிலரின் கைகளில் மட்டும் குவிந்துள்ளது. பண மதிப்பு இழப்பு நடவடிக்கையால் ஒரு பொருளாதார சுனாமியை பாஜக அரசு உருவாக்கியது. அதன் விளைவுகளை இந்தியப் பொருளாதாரம் இன்று வரை அனுபவிக்கிறது. சிறு, குறு, நடுத்தர தொழில்களை நசுக்குவதற்காக மட்டுமே சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது” என ராகுல் காந்தி பேசினார்.