Major Saravanan | கார்கில் வெற்றியின் ரியல் ஹீரோ: தமிழகத்து சிங்கம் வீர் சக்ரா மேஜர் சரவணனின் கதை!
கார்கில் போரில் பாகிஸ்தான் ராணுவத்தால் கொல்லப்பட்ட வீர்சக்ரா மேஜர் சரவணனின் 22ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது
1999ஆம் ஆண்டு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியில் காஷ்மீர் விடுதலைப் போராளிகளும் பாகிஸ்தான் ராணுவமும் சேர்ந்து ஊடுருவி இருப்பது மே 3ஆம் தேதி மேய்ப்பர்கள் மூலம் இந்திய ராணுவத்திற்கு தெரிய வந்தது. பாகிஸ்தானின் ஊடுருவலை தடுக்க மே 5ஆம் தேதி கார்கில் பகுதியில் தனது தாக்குதலைத் இந்திய ராணுவம் தொடங்கியது. ஜூலை 26ஆம் தேதி கார்கில் யுத்தம் முழுவதுமாக முடிவுக்கு வந்ததாக இந்திய ராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்த கார்கில் யுத்தத்தில் பீகார் முதல் நிலைப்படைப்பிரிவில் பணியாற்றிய திருச்சியை சேர்ந்த வீரர் மேஜர் சரவணனின் வீரதீர செயலும், அவரது வீரமரணமும் கார்கிலை மீண்டும் இந்திய ராணுவம் கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தது.
1999 மே மாதம் 29ஆம் தேதி அதிகாலை தனது குழுவினருடன் கார்கில் அருகே உள்ள பதாலிக் பகுதியில் தாக்குதலை மேஜர் சரவணன் தொடங்கினார். ஜிபர் மலைப்பகுதியில் இருந்து இந்திய ராணுவத்தின் மீது மறைந்திருந்து தாக்குதல் நடத்திய காஷ்மீர் விடுதலை போராளிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலை தனது லாவகமான ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் மூலம் முறியடித்து முன்னேறத் தொடங்கினார். மேஜர் சரவணன் தலைமையிலான படைகள் அதிக எதிரிகளை வீழ்த்தி கார்கில் பகுதியை நோக்கி முன்னேறத் தொடங்கின. பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பிரிவினைவாதிகளின் வெடிகுண்டு வீச்சிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்ததிலும் மேஜர் சரவணன் கடும் காயமடைந்தார். தனது சகாக்கள் அவரை திரும்பி வர அறிவுறுத்தி இருந்த நிலையிலும் கார்கில் பகுதியை நோக்கிய மேஜர் சரவணனின் படைப்பிரிவு தாக்குதல் தொடர்ந்தது. ரத்தக்காயத்தில் அவர் வீழ்ந்திருந்த போதிலும் அவர் மடிந்தார் என எண்ணி அருகில் வந்த எதிரிகள் இரண்டு பேரை கொன்று மேஜர் சரவணன் வீர மரணம் அடைந்தார். சரவணன் மரணம் அடைந்தைருந்தாலும் அவரின் ஆவேசத் தாக்குதல் கார்கில் பகுதியை நோக்கி இந்திய ராணுவம் முன்னேறிச் செல்ல மிக முக்கிய காரணமாக இருந்தது.
மேஜர் சரவணனின் மறைவுக்கு பிறகு இந்திய அரசின் மிக உயரிய விருதான வீர்சக்ரா விருது அவருக்கு வழங்கப்பட்டது. தனது உடல் வெடிகுண்டு வீச்சால் பாதிக்கப்பட்டபோதிலும் தன் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருந்த போதிலும் மண்ணையும் மக்களையும் காக்க வேண்டும் என்ற மேஜர் சரவணன் போன்ற எண்ணற்ற வீரர்களின் தியாகம் தான் கார்கில் யுத்தத்தில் இந்தியா வெல்ல காரணமாக அமைந்தது.