Child Labour : 9000 குழந்தைத் தொழிலாளர்களை மீட்ட அவெஞ்சர் வுமன் அனுபமாவின் கதை!
பிள்ளைகள் பள்ளிக்கூடத்துக்கு செல்லும்போது தான் மட்டும் அம்மாவுடன் எஜமானர் வீட்டின் மதிய உணவுப் பாத்திரத்தைக் கழுவுவது தன்மீது காட்டப்படும் பாரபட்சம் எனப் புரிந்துகொண்ட அனுபமா தான் வேலை பார்க்கும் வீட்டின் எஜமானர்களில் ஒருவரிடமே தன்னை பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிடும்படி கேட்டிருக்கிறார்.
’உங்களுக்கு ஒரு விதி பிடிக்கவில்லையா? அதைப் பின்பற்றுங்கள்...முன்னேறி உயரத்தைத் தொடுங்கள்.. உயரத்திலிருந்து அந்த விதியை மாற்றுங்கள்!’
அடாஃல்ப் ஹிட்லரின் இந்த மேற்கொள் மகாராஷ்டிர மாநிலம் கொல்ஹாப்பூரைச் சேர்ந்த அனுபமா போன்ஸ்லேவுக்கு நன்கு பொருந்தும்.தனது ஆறு வயதில் குழந்தைத் தொழிலாளராக வீடுகளில் வேலைபார்த்த அனுபாமா இன்றே அதே குழந்தைத் தொழிலாளர்களை மீட்பவராகச் செயல்பட்டு வருகிறார்.
ஆனால் அவர் இந்த உயரத்தை அடைய நிறைய வலிகளை எதிர்கொண்டார். தினசரி கூலி வேலை செய்து குடும்பத்தின் வயிற்றை நிரப்பி வந்தனர் அனுபமாவின் தாய் தந்தை.அனுபமாவும் தனது அம்மாவுடன் வேலைக்குச் செல்லத் தொடங்கினார்.
வீட்டில் குழந்தைகளும் பெற்றோரைப் போல வேலைக்குச் செல்ல வேண்டும் போல என நம்பிக்கொண்டிருந்த அனுபமாவுக்குத் தான் வேலைபார்க்கும் வீட்டின் எஜமானர்களின் பிள்ளைகள் புத்தகங்களைப் படிப்பதும் பள்ளிக்கூடத்துக்குச் செல்வதும் வித்தியாசமாக இருந்திருக்கிறது. பிள்ளைகள் பள்ளிக்கூடத்துக்கு செல்லும்போது தான் மட்டும் அம்மாவுடன் எஜமானர் வீட்டின் மதிய உணவுப் பாத்திரத்தைக் கழுவுவது தன்மீது காட்டப்படும் பாரபட்சம் எனப் புரிந்துகொண்ட அனுபமா தான் வேலை பார்க்கும் வீட்டின் எஜமானர்களில் ஒருவரிடமே தன்னை பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிடும்படி கேட்டிருக்கிறார்.
அந்த எஜமானர்தான் அனுபமா தன் வாழ்வில் சந்தித்த முதல் காவல்தேவதை.’இப்படிப் பலபேர் எனது வாழ்க்கை முழுவதும் எனக்கு உதவினார்கள். அவர்கள் உதவியால்தான் என்னால் படித்து முன்னேற முடிந்தது’ என்கிறார் 52 வயது அனுபமா. இதுவரை 9000 குழந்தைத் தொழிலாளர்கள் வரை மீட்டுள்ளார்.
1990ல் முதன்முதலாக பஜாஜ் ஆட்டோவின் சமூகப்பணிகள் துறையில் தனது பணியைத் தொடங்கினார் அனுபமா. அதன்பிறகு ஆவனி என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்துகொண்டார். அங்கு கடந்த 24 வருடங்களாகப் பணிபுரிந்து வருகிறார். அனுபமா தன்னைச் சமூக வேலைகளில் ஈடுபடுத்திக்கொள்வதற்காக தனிப்பட்ட வாழ்வில் பலவற்றை இழந்திருக்கிறார். வீட்டில் கணவரின் ஒடுக்குமுறைகள் தாங்காமல் தனது இரண்டு பெண் பிள்ளைகளுடன் வீட்டைவிட்டு வெளியேறினார்.
வெளியேறுவது அத்தனை எளிதாக இல்லை.பொருளாதார ரீதியாகவும் மீண்டு வருவது சிக்கலாக இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் தனது படிப்புதான் தனக்கு கைகொடுத்தது என்கிறார் அனுபமா. அனுபமாவின் பெண்களில் ஒருவர் தற்போது ஊடகவியலாளர் மற்றொருவர் இளங்கலைபட்டம் படித்து வருகிறார்.
1995ல் செங்கல் சூளையில் வேலை செய்த 11 பிள்ளைகளை மீட்டதில் இருந்துதான் அனுபமாவின் பயணம் தொடங்கியது. ஆனால் அந்தப் பிள்ளைகளை மீட்பது எளிதாக இல்லை. வேலை பார்த்தவர்கள் அனைவருமே 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனப் பொய் ஆவணத்தை உருவாக்கினார்கள் சூளையை நிர்வாகிப்பவர்கள். மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அனுபமா. மூன்று வருடம் நடந்த இந்த வழக்கின் முடிவில் அந்தப் பிள்ளைகள் விடுவிக்கப்பட்டார்கள். ஆனால் இதற்கிடையே பல கொலைமிரட்டல்களைச் சந்தித்தது அனுபமாவின் குடும்பம். இதற்கெல்லாம் தளராத அனுபமாவின் தைரியத்தைப் பார்த்து தற்போது அந்தச் சூளையை நடத்தியவரே தற்போது அனுபமாவுக்குத் துப்பு கொடுத்துக்கொண்டிருக்கிறார். அனுபமாவைப் போலவே தானும் படித்துப் பலபேரை மீட்கவேண்டும் என்கின்றனர் அவரால் மீட்கப்பட்ட மாணவர்கள். இது தன்னம்பிக்கை ஒன்றே பிடிப்பாய்க் கொண்டு தளராது சமூகத்துக்காக உழைக்கும் அனுபமாவைப் போன்ற என்னற்ற பெண்களுக்குக் கிடைத்த வெற்றி.
Also Read: கேரளாவில் இன்னொரு வரதட்சணை மரணம் : சுசித்ராவுக்கு நடந்தது என்ன?