Udhayanidhi: தமிழ்நாட்டு வங்கிகளில் இந்தி பேசும் மேலாளர்களால் மக்களுக்கு சிரமம் - அமைச்சர் உதயநிதி வேதனை
மத்திய அரசு வேலைகளில் தமிழ்நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், ரயில்வே, எஸ்.எஸ்.சி, மற்றும் வங்கி உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தை மாநிலம் முழுவதும் இலவசமாகத் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மே்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு புத்தக தொகுப்பினை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுத் கழக மேலாண்மை இயக்குனர் இன்னசெண்ட்ட திவ்யா, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் வீர ராகவ ராவ், நான் முதல்வன் போட்டித் தேர்வு பிரிவின் சிறப்புத் திட்ட இயக்குனர் சுதாகரன் ஆகியோர் பங்கேற்றனர்.
பயிற்சி வகுப்புகள்
நான் முதல்வன் போட்டித் தேர்வு பிரிவில், தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் இரயில்வே, எஸ்.எஸ்.சி மற்றும் வங்கி தேர்வுகளுக்கான கட்டணமில்லா ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகளை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 100 நாட்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மாவட்டந்தோறும் 150 மாணவர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள், வழிகாட்டுதல் மற்றும் பாடப்புத்தகங்கள் கொடுக்கத் திட்டமிடப்பட்டு அதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
பயிற்சி வகுப்புகளுக்காக நான் முதல்வன் இணையதளத்தில் 26,000 விண்ணப்பதாரர்கள் விருப்பம் தெரிவித்து இருந்தனர். அதில் 6,900 மாணவர்கள் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் அடிப்படையிலும் தமிழ்நாட்டு அரசின் கல்விக்கான இடஒதுக்கீடு அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதற்கான பயிற்சி வகுப்புகள் மற்ற மாவட்டங்களில் கடந்த மே மாதம் செயல்பாட்டிற்கு வந்த நிலையில், தற்போது சென்னையில் மூன்று இடங்களில் நடைபெறும் வகுப்பினை அமைச்சர் உதயநிதி துவக்கி வைத்தார். பின்னர் மேடையில் பேசிய அவர்,
”நான் முதல்வன் போட்டி தேர்வு மூலம் இரயில்வே, எஸ்.எஸ்.சி மற்றும் வங்கி போன்ற ஒன்றிய போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தை துவக்கி வைப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. தமிழ்நாடு கல்வியில் தலைசிறந்த மாநிலமாக விளங்கி வருகிறது. பள்ளிக்கல்வி, உயர்கல்வி தமிழ்நாட்டின் நிலை தேசிய சராசரியை விட அதிகமாக விளங்கி வருகிறது. கலைஞர் தீட்டிய பல்வேறு கல்வி திட்டங்கள் மற்றும் அவரது சீரிய முயற்சியால், கல்வியில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக விளங்கி வருகிறது.
நான் முதல்வன் திட்டம்:
தமிழ்நாட்டில் உள்ள முதல் தலைமுறை மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள் என அனைவரும் கலைஞர் கல்விக்காக தீட்டிய திட்டங்களால் உருவாக்கினர். மாறிவரும் உலக நிலையில், மத்திய அரசை தாண்டி உலக அளவிற்கு போட்டி போட வேண்டி உள்ளது. இந்த சூழலில் தமிழ்நாட்டு மாணவர்கள், பட்டதாரிகள் எப்படி வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று யோசித்து உருவாக்கியது தான் நான் முதல்வன் திட்டம்.
தமிழ்நாட்டு மாணவர்கள் பெரும் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு சென்றாலும் , மத்திய அரசு வேளைகளில் தமிழ்நாடு மாணவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் குறைந்துகொண்டே வருகிறது. ஒரு காலத்தில் UPSC தேர்வுகளில் 25 முதல் 30 சதவீத மாணவர்கள் வெற்றி பெற்றனர். இன்றைக்கு அந்த நிலை மாறி வருகிறது. வருட வருடம் மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ்நாட்டு மாணவர்கள் இருப்பது குறைந்து கொண்டே வருகிறது.
தமிழ்நாட்டு வங்கியில் இந்தி பேசுவோர்:
தமிழ்நாட்டு கிராம வங்கிகளில் ஹிந்தி மொழி பேசுவோர் தான் மேலாளர்களாக உள்ளனர். இதனால் முதியவர்கள் வங்கி சேவை பெறுவதில் சிரமபடுகின்றனர். மொழி ஒரு தடையாக இருப்பதால் அரசு சேவை சென்றடைவதில் சிக்கல் உள்ளது . எனவே தான் இந்த மத்திய அரசு தேர்வுகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் தேர்ச்சி அடைய இந்த நான் முதல்வன் போட்டித்தேர்வு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மாவட்டந்தோறும் 150 மாணவர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள், வழிகாட்டுதல் மற்றும் பாடப்புத்தகங்கள் கொடுக்கத் திட்டமிடப்பட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. திட்டம் தொடங்கி 3 மாதம் ஆன நிலையில் பயிற்சி வகுப்புகளுக்காக நான் முதல்வன் இணையதளத்தில் 29,024 விண்ணப்பதாரர்கள் விருப்பம் தெரிவித்து இருந்தனர்.
பயிற்சி மையங்கள்:
அதில் 6900 மாணவர்கள் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் அடிப்படையிலும், தமிழ்நாட்டு அரசின் கல்விக்கான இடஒதுக்கீடு அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் மட்டுமே 1000-கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன.
சென்னையில் பெறப்பட்ட 3042 பேரின் விண்ணப்பத்தில் 450 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு மூன்று பயிற்சி மையங்கள் இன்று தொடங்குகிறது. மத்திய அரசு வேலைகளுக்கு பயிற்சி பெற டெல்லி தனியார் பயிற்சி மையங்களில் அதிக அளவு செலவில் தான் பயிற்சி பெற்று வந்தனர். ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தான் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது”. இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.