”இதனால் தான் காங்கிரஸ் எதிர்க்கிறது” - தி கேரளா ஸ்டோரி படத்திற்கு சப்போர்ட் செய்யும் பிரதமர் மோடி..!
கர்நாடக தேர்தல் பிரச்சார களத்தில் இன்றைக்கு ரிலீஸ் ஆகியுள்ள, தி கேரளா ஸ்டோரி” படத்தினைப் பற்றி பிரதமர் மோடி கருத்து கூறியுள்ளார்.
கர்நாடக தேர்தல் பிரச்சார களத்தில் இன்றைக்கு (மே, 5ஆம் தேதி ) ரிலீஸ் ஆகியுள்ள, தி கேரளா ஸ்டோரி” படத்தினைப் பற்றி பிரதமர் மோடி கருத்து கூறியுள்ளார்.
அதில் அவர், தீவிரவாதிகளின் முகத்திரையை கிழிக்கும் விதமாக தி கேரளா ஸ்டோரி திரைப்படம் உள்ளது எனக் கூறியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், பிரதமர் மோடி அப்படம் குறித்த தனது கருத்தை கூறியுள்ளார்.
தி கேரளா ஸ்டோரி எனும் திரைப்படம் இன்று இந்தியா முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் அதாவது டிரெய்லர் ரிலீசானது முதல் இந்த திரைப்படத்திற்கான எதிர்ப்பு நாடு முழுவதும் எழுந்தது. குறிப்பாக தென் இந்திய மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்த எதிர்ப்பு வழக்காடு மன்றங்கள் (நீதி மன்றம்) வரை சென்று படத்தினை ஏன் ரிலீஸ் செய்யக்கூடாது என வாதாடினர். இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, உளவுத்துறை இந்த திரைப்படத்தினை வெளியிட்டால் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என தமிழ்நாடு அரசினை எச்சரித்தது. ஆனால், வழக்காடு மன்றம் படத்தினை குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் செய்ய அனுமதி அளித்தது.
இந்நிலையில், இந்த திரைப்படம் இன்று ரிலீசானது. கர்நாடக மாநில சட்டமன்ற பொதுத்தேர்தல் பரப்புரையில் உள்ள பிரதமர் மோடி, தி கேரளா ஸ்டோரி படம் குறித்து தனது கருத்தினை கூறியுள்ளார். அதில் அவர், தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தீவிரவாதிகளின் சதி வேலைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் திவிரவாதிகளின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது. திவிரவாதிகளின் நாசகர செயலை எதிர்க்கும் படத்தினை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது என குறிப்பிட்டுள்ளார். இன்றைக்கு ரிலீசான திரைப்படம் குறித்து பிரதமர் மோடி படத்தினைப் பார்க்காமல் எப்படி கருத்து சொல்ல முடிகிறது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும், கடந்த ஆண்டு கர்நாடகாவில் இஸ்லாமியப் பெண்கள் கல்வி வளாகங்களில் ஹிஜாப் அணிவது பெரும் சர்ச்சைகுரிய விசயமாக மாறியது குறிப்பிடத்தக்கது. அதாவது முதலில் கர்நாடக அரசு கல்வி வளாகங்களில் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என அரசாணை பிறப்பித்தது. இதில் கர்நாடக மாநில நீதி மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசின் அரசாணைக்கு தடை விதிக்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநிலம் ஏற்கனவே சர்ச்சைக்குரிய விசயத்தினை எதிர்கொண்டு அதில் ஆளும் பாஜகவின் கை ஓங்கியதால் பிரதமர் மோடி இந்த முறை தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தினை கையில் எடுத்துள்ளார் எனவும் பலர் கூறிவருகின்றனர்.