Karnataka Election: 23 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பா.ஜ.க.. கர்நாடகா தேர்தல் களத்தில் வலுக்கும் போட்டி..
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலையொட்டி பாரதிய ஜனதா கட்சி இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலையொட்டி பாரதிய ஜனதா கட்சி இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 189 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட நிலையில் 23 பேர் கொண்ட 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ಕರ್ನಾಟಕ ವಿಧಾನಸಭಾ ಚುನಾವಣೆಯಲ್ಲಿ ಸ್ಪರ್ಧಿಸುವ @BJP4Karnataka ದ 23 ಅಭ್ಯರ್ಥಿಗಳ ಎರಡನೇ ಪಟ್ಟಿ. ಎಲ್ಲ ಅಭ್ಯರ್ಥಿಗಳಿಗೆ ಶುಭವಾಗಲಿ. #BJPYeBharavase pic.twitter.com/NWZzdqPVLh
— Basavaraj S Bommai (@BSBommai) April 12, 2023
கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்குமான பொதுத்தேர்தல் வரும் மே மாதம் 10-ஆம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. ஒருவர் பெரும்பான்மையை பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும். கர்நாடகாவில் 5.21 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2.62 கோடி ஆண் வாக்காளர்களும், 2.59 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளனர். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டில் இருந்தே வாக்கு அளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மே 13-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடக்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகள் தரப்பில் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மே 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க கர்நாடகா மாநிலத்திற்கு இந்த ஆண்டு பல முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அதேபோல் காஙிகிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும் கர்நாடகா மாநிலத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த இரண்டு கட்சிகள் மட்டுமல்லாமல் ஜனதா தளம் (எஸ்) மற்றும் ஆம் ஆத்மியும் களத்தில் இறங்குகிறது. டெல்லி, பஞ்சாப், குஜராத்தை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி கர்நாடகாவில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது.
ஆம் ஆத்மி தரப்பில் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தரப்பில் முதல் மற்றும் இரண்டாம் கட்டம் என மொத்த 166 வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். அதேபோல் பா.ஜ.க தரப்பில் 189 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டப்பட்டது. அதனை தொடர்ந்து 23 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பாட்டியலை பா.ஜ.க வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு பட்டியலிலும் முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டரின் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் 2 பெண் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 12 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் மீதமுள்ள தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.