Sunita Williams: அன்று அவமானம்? இன்று இந்தியாவின் மகளா? கொலை, மோடிக்கும் - சுனிதா வில்லியம்ஸ் குடும்பத்திற்குமான பகை
Sunita Williams: சுனிதா வில்லியம்ஸ் குடும்பம் மற்றும் பிரதமர் மோடி இடையேயான, அரசியல் மோதல் மற்றும் பகை குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Sunita Williams: சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வந்ததும் இந்தியாவிற்கு வரவேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுனிதா வில்லியம்ஸ் - குவியும் வாழ்த்துகள்
சோதனை பயணமாக 8 நாட்களுக்கு திட்டமிடப்பட்ட சுனிதா வில்லியம்ஸின், விண்வெளி பயணம் எதிர்பாராத விதமாக 9 மாதங்களுக்கு நீண்டது. தொழில்நுட்ப கோளாறுகள், அமெரிக்க அரசியல் என பல்வேறு காரணங்களால், சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது தாமதமாகி வந்தது. இந்நிலையில், 286 நாட்களுக்குப் பிறகு சுனிதா வில்லியம்ஸ் அடங்கிய குழு, நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் குழுவின் கூட்டு முயற்சியால் பத்திரமாக பூமி திரும்பியுள்ளார். இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி அழைப்பு..
இந்தியாவின் குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட சுனிதா வில்லியம்ஸ் பாதுகாப்பாக பூமிக்கு வந்தடைந்ததை ஒட்டுமொத்த நாடுமே கொண்டாடி வருகிறது. இதனிடையே பிரதமர் மோடி, சுனிதா வில்லியம்ஸிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “ நான் அமெரிக்கப் பயணங்களின் போது அதிபர் ட்ரம்ப், முன்னாள் அதிபர் பைடனைச் சந்தித்தபோது, உங்கள் நலம் குறித்து விசாரித்தேன். நீங்கள் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்தாலும், நீங்கள் தொடர்ந்து எங்கள் இதயங்களுக்கு நெருக்கமாக இருக்கிறீர்கள். நீங்கள் திரும்பிய பிறகு, உங்களை இந்தியாவில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம். தனது சிறந்த மகள்களில் ஒருவருக்கு விருந்தளிப்பது இந்தியாவிற்கே மகிழ்ச்சியாக இருக்கும்” என பிரதமர் மோடி பாசமும், நெகிழ்ச்சியும் கலந்து அந்த கடிதத்தை எழுதியுள்ளார். அதேநேரம், குஜராத் அரசியலால் சுனிதா வில்லியம்ஸ் குடும்பம் மற்றும் பிரதமர் மோடி இடையேயான, அரசியல் மோதல் மற்றும் பகை குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
வாழ்த்து கூட சொல்லாத மோடி..!
கடந்த 2007ம் ஆண்டு சுனிதா வில்லியம்ஸ் முதல்முறையாக விண்வெளிக்கு சென்றார். அவரது பயனம் பாதுகாப்பாக அமைய வேண்டும் என, குஜராத் உட்பட ஒட்டுமொத்த இந்தியாவுமே பிரார்த்தனையில் ஈடுபட்டது. ஆனால், அப்போதைய குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி, சுனிதா வில்லியம்ஸிற்கு ஒரு வாழ்த்து செய்தி கூட தெரிவிக்கவில்லை. முன்னாள் முதலமைச்சரும், அப்போதைய செய்தி தொடர்பாளருமான விஜய் ரூபானி " இப்போதைக்கு பாராட்டு விழாவுக்கும் எல்லாம் எதுவும் முடிவு பண்ணல. இது அப்படியான விழாவுக்கு பிளான் பண்றதுக்கான சரியான நேரம் இல்ல. இன்னும் நாள் இருக்கு" என குறிப்பிட்டார். விஷ்வ குஜராத் சமாஜ் எனும் அமைப்பு தான், சுனிதா வில்லியம்ஸுக்கான பாராட்டு விழாவுக்குக்கூட ஏற்பாடு செய்தது.
குஜராத் அரசியல், கொலை:
குஜராத் அரசின் இந்த முடிவுக்கு காரணம் ஒரு கொலை தான். 1998ம் ஆண்டு குஜராத் தேர்தலில் சுனிதாவின் உறவினரான ஹரென் பாண்ட்யா போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக தேர்தலில் பரப்புரை மேற்கொண்டு, அவரது வெற்றி விழாவிலும் சுனிதா பங்கேற்றார். அடுத்தடுத்து அரசியலில் வளர்ந்து உள்துறை அமைச்சரானாலும், ஹரென் பாண்ட்யா அப்போதைய முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு எதிர்கோஷ்டியாக செயல்பட்டுள்ளார். அந்த சூழலில் அவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக பல்வேறு அச்சுறுத்தல்கள் வெளியான நிலையில், 2003ம் ஆண்டு அவர் சுட்டு கொல்லப்பட்டார். போதிய பாதுகாப்பு வழங்கப்படாததே இதற்கு காரணம் குற்றச்சாட்டு எழுந்தது.
முடியாத பகை
ஹரென் பாண்ட்யா கொல்லப்பட்டபோது, விண்வெளி பயணத்திற்கான பயிற்சியில் இருந்ததால் சுனிதா வில்லியம்ஸால் இந்தியாவிற்கு வரமுடியவில்லை. இப்படியான சூழலில் தான் சுனிதா வில்லியம்ஸ், கடந்த 2013ம் ஆண்டு இந்தியா வந்தார். குஜராத்தில் தங்கியுள்ள தனது குடும்பத்தினரை சந்தித்தார். ஆனால், அப்போதைய முதலமைச்சர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்காததால், மாநில அரசின் விருந்தினர் என்ற அங்கீகாரத்தை அப்போதைய குஜராத் அரசு வழங்கவில்லை.
அதனைதொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டில் இந்திய வம்சாவளியை சார்ந்த மறைந்த விண்வெளி ஆராய்ச்சியாளரான கல்பனா சாவ்லாவுக்காக அமெரிக்காவில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில், பிரதமர் மோடியும், சுனிதா வில்லியம்ஸும் சந்தித்தனர். அந்த சந்திப்பு குறித்து பேசியபோதும், “கல்பனா சாவ்லாவின் விண்கல விபத்து, விண்வெளியில் இந்தியாவுடன் நாம் (அமெரிக்கா) கொண்டுள்ள ஆழமான ஒத்துழைப்பையும் ஒப்புக்கொள்ள அவர் (மோடி) நேரம் எடுத்துக்கொண்டது எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது. தனிப்பட்ட முறையில் இது எனது தோழி கல்பனா சாவ்லாவை அவர்களை நினைவுகூரும் நிகழ்வாகும்” என்றே சுனிதா வில்லியம்ஸ் குறிப்பிட்டார். நரேந்திர மோடியின் பெயரை கூட அவர் குறிப்பிடவில்லை என்பது நினைவுகூறத்தக்கது.





















